மதுரை: ''புள்ளி விபரங்களை அப்படியே வாசிக்கின்ற ஒரு பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். தவறான புள்ளிவிபரங்களை கூறி பயனாளிகளை புண்படுத்த வேண்டாம்,'' என, முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டினார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:
மற்றவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும், சம வாய்ப்புகளையும் பெற்று, மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் வாழ, முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, வேலை வாய்ப்புகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு சலுகைகளை வழங்கியது.
இந்நிலையில், 'முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புள்ளி விபரங்கள் தவறானவை என்பதால், மாற்றுத்திறனாளிகள் தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளோம்' என, தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு தொகை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டதாக முதல்வர் கூறியிருக்கிறார். கடும் ஊனமடைந்தவர்களுக்கான 1,500 ரூபாய் உதவித்தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது; பிறருக்கு உயர்த்தப்படவில்லை.
மேலும், 1,000 ரூபாய் பெறும் 4 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உயர்வு வழங்கப்படவில்லை. இரண்டு லட்சம் பேருக்கு உதவித்தொகை உயர்த்தப்பட்டதாக கூறியதும் தவறானது.

கடும் ஊனம் அடைந்த 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே இது ஒரு தவறான புள்ளி விபரம். பக்கம் பக்கமாக முதல்வர் வெளியிடும் புள்ளி விபரங்கள் தவறாக வெளியிடப்படுகின்றன என்பதை, முன்னாள் முதல்வர் பழனிசாமி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார்.
அது உண்மை என்பது இப்போது மீண்டும் உறுதியாகி உள்ளது. முதல்வர் இதுபோன்ற தவறான புள்ளி விபரங்களை வெளியிட்டு, பயனாளிகளின் மனதை புண்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.