மதுரை : தமிழகத்தில் 2018க்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு டி.டி.சி.பி., எனும் நகர் ஊரமைப்பு இயக்கக அங்கீகாரத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்' என தனியார் பள்ளி கூட்டமைப்பான 'பெப்சா'வின் மாநில தலைவர் ஆறுமுகம் வலியுறுத்தினார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் அங்கீகாரம் புதுக்கப்படாமல் இயங்குகின்றன; இது, மிக ஆபத்தானது. பள்ளி வாகனங்களுக்கு எப்.சி., உரிமம் பெற பள்ளி அங்கீகாரம் கட்டாயம்.
அங்கீகார பிரச்னைக்கு 2018ல் அனைத்து பள்ளிகளுக்கும் டி.டி.சி.பி., அங்கீகாரம் வேண்டும் என்ற கல்வித்துறை பிறப்பித்த உத்தரவே காரணம்.
இதன்படி ஒவ்வொரு பள்ளி கட்டடங்களை சுற்றியும் 20 அடி காலியிடம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது தான், தனியார் பள்ளிகளுக்கு தீராத தலை வலியாக உள்ளது.
உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு முன் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்பது எப்படி சாத்தியமாகும்?
'கடந்த 2011க்கு முன் கட்டப்பட்ட திட்டமில்லா பகுதி பள்ளிகளுக்கு டி.டி.சி.பி., அங்கீகாரம் இல்லாமல் புதுப்பிக்கலாம்' என, சென்னை உயர்நீதிமன்றம் அக்., 28ல் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பள்ளிகளுக்கு வழக்கமான மூன்று ஆண்டு புதுப்பித்தல் அங்கீகாரம் வழங்க கல்வித்துறை உடன் உத்தரவிட வேண்டும்.
பள்ளிக் கல்வியும், வீட்டுவசதி மற்றும் நகரமைப்பு துறையும் இணைந்து ஆலோசித்து இவ்விஷயத்தில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே 2018க்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு தளர்வுடன் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.