ஆமதாபாத்: குஜராத்தில் தாய் - தந்தையை இழந்து தனியாக வாழும் இரண்டு சிறுவர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உயர்வாக பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குஜராத்தின் நேத்ரங் என்ற இடத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது: இரண்டு சிறுவர்களை சந்தித்துவிட்டு வருவதால் கூட்டத்திற்கு வர தாமதமாகிவிட்டது. குஜராத்தை சேர்ந்த அவி மற்றும் ஜெய் என்ற இரண்டு சிறுவர்களை சந்தித்துவிட்டு வருகிறேன். அவர்கள் முறையே ஒன்பதாவது மற்றும் ஆறாம் வகுப்பில் படித்து வருகின்றனர்.
ஆறு ஆண்டுகளுக்கு முன் இவர்கள் தாய் - தந்தையை இழந்தனர். ஆதரவற்று நின்ற அந்த சிறுவர்களை பற்றி கேள்விப்பட்டு அவர்கள் தங்குவதற்கு வீடு மற்றும் கல்வி கற்க தேவையான உதவியை செய்ய அரசுக்கு உத்தரவிட்டேன். அரசின் உதவியுடன் அவர்கள் நன்கு படித்து வருகின்றனர்.

இன்று அவர்களை சந்தித்து எதிர்காலத்தில் என்னவாக ஆசை என கேட்டேன். ஒரு சிறுவன் மாவட்ட கலெக்டர் ஆக வேண்டும் என்றும் இன்னொரு சிறுவன் இன்ஜினியர் ஆக வேண்டும் எனவும் ஆசையை தெரிவித்தனர்.
உணர்ச்சி கொந்தளிப்பில் என் மனம் விம்மியது. யாரும் இல்லாமல் தனியாக இருக்கும் வேளையிலும் அந்த சிறுவர்களின் நம்பிக்கையை பார்த்து பெருமை அடைந்தேன்.இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் அந்த சிறுவர்களை சந்தித்த படங்கள் வைரலானது.