சென்னை : அரசு பள்ளிகளில், மண்டல அளவிலான ஆய்வுக்கு செல்லும் குழுவினர், மாணவர்களுக்கு குறு மாதிரி தேர்வு நடத்தி, மதிப்பீடு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகள் முறையாக நடக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள, மாதம்தோறும் மண்டல ஆய்வு கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. இந்த கூட்டங்களில், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் பங்கேற்று, பள்ளிகளின் மேம்பாட்டுக்கு திட்டமிடுகின்றனர்.
இந்நிலையில், மண்டல அளவிலான ஆய்வுக்கு செல்லும் ஆசிரியர்கள், அதிகாரிகள் குழுவினர், மாணவர்களுக்கு அவர்களின் வகுப்புக்கு ஏற்ற பாடத் திட்டத்தில் இருந்து, குறு வினாக்கள் அடங்கிய, மாதிரி தேர்வு நடத்தும்படி பள்ளிக்கல்வி கமிஷனரகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த மாதிரி தேர்வு வழியே, மாணவர்களின் கற்றல் திறனை எளிதில் அறிய முடியும்; மாணவர்களுக்கு தேவையான கற்பித்தல் முறைகளை வரையறுக்க முடியும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.