காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேருந்து சேவை இல்லாமல், ஏராளமான கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் அன்றாடம் அவதிப்பட்டு வருகின்றனர். பல கி.மீ., துாரம் நடந்து சென்று பேருந்து பிடிக்க வேண்டிய அவலம் ஏற்படுவதாக கிராமவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் போன்ற பகுதிகளில் இயங்கும் ஏராளமான தொழிற்சாலைகளுக்கும், சென்னையில் செயல்படும் நிறுவனங்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும் கிராமப்புற தொழிலாளர்கள் தங்களது கிராமப்புறங்களில் இருந்து அருகில் உள்ள நகர்ப்புறங்களுக்கு செல்ல கூட போதிய பேருந்து வசதியில்லாத காரணத்தால், இன்று வரை கிராமபுற மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கிராமப்புறங்களில் இருந்து, இரண்டு முதல் நான்கு கி.மீ.,துாரம் வரை நடந்து சென்று, கூட்டு சாலையில் பேருந்து பிடித்து, அருகில் உள்ள நகர்ப்புற பஸ் நிலையத்து சென்று, அங்கிருந்து சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம் போன்ற பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
உதாரணமாக, உத்திரமேரூர் ஒன்றியம் திருமுக்கூடல் கிராமத்தில் இருந்து உத்திரமேரூர் நகருக்கு செல்ல வேண்டுமானால், செங்கல்பட்டு அல்லது காஞ்சிபுரம் சென்று, அங்கிருந்து உத்திரமேரூர் பேருந்து பிடித்து செல்ல வேண்டும். இரண்டு பேருந்து ஏறி, இறங்கினால்தான் உத்திரமேரூர் நகருக்கு செல்ல முடியும்.
இதேபோல், காஞ்சிபுரம்அடுத்த கூரம், வதியூர் போன்ற கிராமங்களில் வசிக்கும் கிராமவாசிகள், சென்னைக்கு செல்ல வேண்டுமானால், கூரம் கிராமத்திலிருந்து ஐந்து கி.மீ.,துாரம் நடந்து வந்து கூரம் கூட்டுசாலையில் நிற்க வேண்டும். அங்கு, அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வரும் பேருந்தை பிடித்து காஞ்சிபுரம் சென்று, அங்கிருந்து சென்னை பேருந்தில் பயணிக்க வேண்டும். இத்தனை சிரமங்களை, கிராமப்புற மக்கள் அன்றாடம் சந்திக்கின்றனர்.

தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், மாணவ,மாணவியருக்கும் இதே நிலை தான் நீடிக்கிறது. மாணவர்கள் தங்களது வீட்டிலிருந்து சில கி.மீ., நடந்து சென்று, அதன்பிறகு பேருந்து பிடித்து செல்ல வேண்டிய நிலை பல கிராமங்களில் நீடிக்கிறது. உதாரணமாக, உத்திரமேரூர் அருகில் உள்ள முருகேரி, ஆண்டிதாங்கல், நெமிலிப்பட்டு போன்ற கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவியர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதேபோல், காஞ்சிபுரம் - அகரம்துாளி இடையே 89ஏ வழித்தடத்தில், காலை 8:00 மணி, மாலை 5:00 மணிக்கு மட்டுமே பேருந்து இயக்கப்படுகிறது. மதியம், 1:30 மற்றும் இரவு 8:45 மணிக்கு வழங்கப்பட்ட சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதேபோல், வந்தவாசியில் இருந்து உத்திரமேரூர் பகுதிக்கு டவுன் பேருந்து, காலை 7:30 மணிக்கு மட்டுமே இயக்கப்படுவதாகவும், பகல் 11:30 மணி, மதியம் 3:30 மற்றும் இரவு 7:30 ஆகிய நேரங்களில் வழங்கப்பட்ட பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக, கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
வாலாஜாபாத் நகரில் இருந்து கரூர் கிராமத்திற்கு பேருந்து இயக்க வேண்டும்என நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. இந்த வழித்தடத்திற்கு புதிய பேருந்து இயக்காவிட்டாலும், புத்தாகரம் கிராமத்திற்கு வரும் பேருந்தை, கரூர் வரை நீட்டித்தால், கரூர் கிராமவாசிகள் பயனடைவர் என, கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், படப்பையில் இருந்து, குன்றத்துார் நகருக்கு கூட பேருந்து இல்லை என படப்பையை சுற்றியுள்ள பகுதிவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பெரிய அளவில் வளர்ச்சி பெறும் படப்பையில் இருந்தே, குன்றத்துாருக்கு பஸ் இல்லாதது, பணிக்கு செல்வோரிடையே நாள்தோறும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகம், பேருந்து சேவை இல்லாத இடங்களுக்கு, புதிய பேருந்து சேவையை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏற்கனவே போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து வசதியில்லாத பகுதிகள் குறித்து தெரிவித்தால், பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.