மும்பை : பெண்களின் ஆடை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ் மீது, பெண்கள் அமைப்பினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மஹாராஷ்டிராவின் தானே பகுதியில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் யோகா குரு பாபா ராம்தேவ், மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னவிசின் மனைவி அம்ருதா பட்னவிஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதில், பாபா ராம்தேவ் பேசுகையில்,''சமூக விதிகளுக்கு உட்பட்டு நாம் ஆடைகள் அணிகிறோம். குழந்தைகளாக இருந்த போது ஆடைகள் அணிவதில்லை. பெண்களுக்கு எந்த ஆடையும் பொருத்தமாக இருக்கும்,'' என்று கூறிய அவர், அதற்கு பின் பேசியது சர்ச்சைக்குரிய வகையிலும், பெண்களை அவமதிக்கும் வகையிலும் இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.
பாபா ராம்தேவ் சிரித்துக்கொண்டே பேசிய, இது தொடர்பான வீடியோவை, புதுடில்லி பெண்கள் கமிஷன் தலைவர் ஸ்வாதி மாலிவால் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். பெண்கள் அமைப்பினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பாபா ராம்தேவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.