சென்னை : பனிப்பொழிவு காரணமாக, நேற்று சென்னையில் தரையிறங்க வேண்டிய மூன்று விமானங்கள், பெங்களூரு, ஹைதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டன; இதர விமானங்களின் சேவையிலும் தாமதம் ஏற்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று காலை, 6:00 முதல் 8:00 மணி வரை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால், சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து, சென்னை வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்க முடியாததால், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
குவைத்தில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானமும், புனேயில் இருந்து வந்த இண்டிகோ விமானமும், ஹைதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.
மலேசியா, இலங்கை, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்த ஏழு விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. சென்னையில் இருந்து, மலேசியா, இலங்கை, கொச்சி, கோல்கட்டா, பெங்களூரு உட்பட, எட்டு நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.