வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக களமிறங்கி வெற்றி பெற்றதால் தற்போதைய நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில் அரசு சார்பில் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை துவக்கி வைக்க நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
நகராட்சி தலைவர் செல்வதற்கு முன் தி.மு.க. நகர செயலர் சுதாகர் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் முகாமை துவக்கினர்; நகராட்சி தலைவர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி கூறியதாவது: தி.மு.க.வினர் துவக்கி வைக்க இது என்ன கட்சி விழாவா... இது அரசு விழா. விழாவிற்கு சென்ற எனக்கு மரியாதை தரவில்லை. 'நீங்க விழாவுக்கு வந்தால் பிரச்னையாகும்' என்கிறார் அரசு மருத்துவர்.
அரசு விழாவில் கட்சியினர் தலையிடக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் அரசு விழாவை கட்சி விழாவாக மாற்றி தி.மு.க.வினர் என்னை திட்டமிட்டு இழிவுபடுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.