சென்னை: டில்லி விமான நிலையம் சென்றபோது ராணுவம் தன்னை சுற்றி வளைத்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த ‛கதை'யை கேட்ட அவரது தம்பிகள் என்றழைக்கப்படும் கட்சி தொண்டர்கள் கிறுகிறுத்துபோயினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடை ஏறினாலே ஏதேனும் ஒரு கதையை தன் ‛தம்பிகளுக்கு' (அவரது கட்சி தொண்டர்களுக்கு) சொல்லுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தன் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களாக அவர் தம்பிகளிடம் பகிர்ந்துகொள்கிறார்.
இலங்கை சென்றது, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தது, அவருடன் ஆமைக்கறி விருந்து சாப்பிட்டது என அவர் வெளிப்படுத்திய ‛கதை'களை கேட்டு இருக்கும் கட்சியினர் புளகாங்கிதம்' அடைவர். அதேபோல், டில்லி விமான நிலையம் சென்றிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை தற்போது பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: நானும் கட்சியில் உள்ள பிரபு, மூத்தவர் ஆகியோர் ஒரு முறை டில்லி விமான நிலையத்திற்கு காரில் சென்றோம்.
பிரபு, காரை பின்னாடி எடுத்து விட்டுவிட்டு வரேன் என கூறிவிட்டு சென்றார். மூத்தவர் ‛தம்' அடிக்க சென்றுவிட்டார். நான் முன்னாடி போய்விட்டேன். திடீரென பார்த்தா, என்னை ராணுவம் சுத்தி வளைச்சுட்டாங்க. எனக்கு ஒன்னுமே புரியவில்லை. தம்பி பிரபுவும் ஒன்றும் புரியாமல் பதறிட்டான். எனக்கும் எதுவும் புரியாம, என்ன சார் விஷயம் என கேட்பதற்குள் அந்த ராணுவ வீரர்கள் என்கிட்ட ஓடி வந்து, கட்டிப்பிடித்து, அண்ணா ஒரே ஒரு செல்பி எடுக்கலாமா, உங்களை ரொம்ப பிடிக்கும் என கேட்டார்கள்.

உடனே மூத்தவர், ‛ஏம்ப்பா கொஞ்ச நேரத்துல பதற வச்சிட்டீங்களே' என்றார். போட்டோ எடுத்துக்கொடுத்த பிறகு அவர்கள் கிளம்பும்போது மூத்தவரிடம் அண்ணனை பத்திரமாக பார்த்துக்கோங்க என கூறிவிட்டு சென்றனர்.
பின்னர் விமானத்தில் ஏறும்போது ஒருவர் சல்யூட் அடித்துவிட்டு சென்றார். அதற்கு மூத்தவர், ‛தம்பி இதனாலதான் இந்த பயலுங்க பதவியை விட்டு கீழே இறங்கவே மாட்டேங்குறாங்க. நமக்கு 10 நிமிஷத்துல என்னா பரபரப்பு ஏற்படுத்திட்டாங்க' என்றார்.
70, 80 வயது ஆட்கள் எல்லாம் என்னை சீமான் அண்ணா என ஆசையாக அழைக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு, 'உன் இனத்தில் இப்படி ஒரு தலைவன் இருந்தான்' என சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில், கண்ட கண்ட தறுதலைகள் எல்லாம் தலைவன் ஆகிவிடும். உண்மையிலேயே சின்னவர் நான்தான். ஆனால், ஆளாளுக்கு பெரியவர், சின்னவர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இவரது பேச்சைக் கேட்டு அவரது அன்புத் தம்பிகள், தலை கிறுகிறுத்துப்போயினர்.