பனமரத்துப்பட்டி, நவ. 28-
சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, 15 கி.மீ.,ல் பனமரத்துப்பட்டி உள்ளது. பழைய, புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, 10க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள், பனமரத்துப்பட்டி தடத்தில் இயக்கப்படுகின்றன.
ஆனால் சமீப காலமாக, இரவு, அதிகாலையில் இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பனமரத்துப்பட்டியில் இருந்து இரவு, 10:00 மணி வரை சேலத்துக்கு இயக்கப்பட்ட பஸ், அதற்கு முன்னதாக, 8:00 மணிக்கே நிறுத்தப்பட்டுள்ளது. அரசு, தனியார் பஸ்கள், போக்குவரத்தை, 8:00 மணிக்கே நிறுத்திக்கொண்டன. அந்த நேரத்தில் சேலம் செல்ல வேண்டிய மக்கள், பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
அதேபோல் சேலத்தில் இருந்து காலை, 4:00, 4:30, 5:00 மணிக்கு பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி தடத்தில் இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. காலை, 6:00 மணிக்கு பின், சேலத்தில் இருந்து பனமரத்துப்பட்டிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. முன் அறிவிப்பு இன்றி காலை, இரவு நேர பஸ்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.