சென்னை: ஆதாரை இணைக்கும்போது மானியங்கள் ரத்து செய்யப்படும் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. மாறுபட்ட கருத்துகள் உண்மைக்கு மாறாக பரப்பப்படுகின்றது.
100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய மின் இணைப்பாக இருந்தாலும் மானியங்களும் தொடர்ந்து பின்பற்றப்படும். ஆதாரை இணைக்கும்போது மானியங்கள் ரத்து செய்யப்படும் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது.
ஒருவர் 5 இணைப்பு வைத்திருந்தாலும், 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரே ஆதாரை வைத்து 10 மின் இணைப்பிலும் இணைக்கலாம். மின் இணைப்பு எண் பெயர் மாற்றாதவர்கள், அவர்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கான வசதிகள் சிறப்பு முகாமில் ஏற்படுத்தப்படும். 2.33 கோடி மின் நுகர்வோரில் 15 லட்சம் பேர் ஆதார் இணைத்துள்ளனர். பணம் கொடுத்து ஆதாரை இணைக்க வேண்டிய அவசியமில்லை.
டிச.,31ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. மக்கள் அவசரமாக ஆதாரை இணைக்க வேண்டியதில்லை. மின்வாரியம் தற்போது 1.59 லட்சம் கோடி கடனில் உள்ளது. இழப்புகளை சரிசெய்யவும், மேம்படுத்தவுமே ஆதார் இணைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.