ஆமதாபாத்: கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்கள் அடிப்பதே அதிசய நிகழ்வாக இருக்கும்போது, ஒரு ஓவரில் 7 சிக்சர் அடித்து சாதனை நிகழ்ந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், விஜய் ஹசாரே தொடரில் மஹாராஷ்டிர அணி வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் ஏழு சிக்சர் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் 'லிஸ்ட் ஏ', விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. ஆமதாபாத்தில் நடந்த 2வது காலிறுதி போட்டியில் உத்தர பிரதேசம் - மஹாராஷ்டிரா அணிகள் மோதின. ‛டாஸ்' வென்ற உ.பி., அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி மஹாராஷ்டிர அணி கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி துவக்கம் தந்தனர். விக்கெட்கள் வீழ்ந்தாலும், கெய்க்வாட் நங்கூரம் போல நிலைத்து நின்று அடித்து ஆடினார். அதிரடி காட்டிய அவர் 159 பந்தில் 220 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 10 பவுண்டரி, 16 சிக்சர்களும் அடக்கம். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் மஹா., அணி 5 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியில் ஷிவா சிங் வீசிய இன்னிங்சின் 49வது ஓவரை எதிர்கொண்ட ருத்ராஜ் கெய்க்வாட், அனைத்து பந்துகளிலும் தொடர்ச்சியாக சிக்சர் விளாசினார். இதில் ‛நோ-பாலாக' வீசப்பட்ட 4வது பந்திலும் சிக்சர் அடித்த நிலையில் அதற்கு மாற்றாக வீசப்பட்ட ‛ப்ரீ-ஹிட்' பந்தையும் சிக்சருக்கு பறக்கவிட்டார். மொத்தத்தில் அந்த ஓவரில் மட்டும் 7 சிக்சர்களை விளாசி உலக சாதனை படைத்தார் கெய்க்வாட். 50 மற்றும் 20 ஓவர் போட்டிகளிலேயே (லிமிடெட் ஓவர் போட்டிகள்) ஒரு ஓவரில் ஏழு சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ருத்ராஜ் கெய்க்வாட்.