வேலுார்:அமைச்சர் துரைமுருகன் விழாவிற்கு பேனர் வைத்தவர் மீது மின்சாரம் தாக்கி இறந்தார்.வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே பி.கே. புரம் கிராமத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள், தி.மு.க., வில் சேரும் விழா இன்று இரவு 7:00 மணிக்கு நடந்தது.
இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலுார் மத்திய மாவட்ட தி.மு.க., செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., வேலுார் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
அமைச்சரை வரவேற்கும் விதமாக அவர் செல்லும் வழியில் உள்ள வடுகந்தாங்கல் மெயின் சாலையில், மாலை 4:30 மணிக்கு அவசர, அவசரமாக பேனர் தயாரித்து வைக்கும் பணியில் முன்னாள் வடுகந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் மார்க்கபந்து, 55, தலைமையில் தி.மு.க., வினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடிரென பேனர் சரிந்து அருகிலிருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது.
இதில் மின்சாரம் தாக்கி சம்பவம் நடந்த இடத்திலேயே மார்க்கபந்து இறந்தார். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கே.வி. குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மின்சாரம் தாக்கி இறந்த மார்க்கபந்து இரண்டு முறை கவன்சிலராக பதவி வகித்தவர். அவர் மனைவி மாலா வடுகந்தாங்கல் ஒன்றிய கவுன்சிலர்.