'உளறல் பேச்சு பேஷனா போச்சு!'
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், அக்கட்சியின் இளைஞர் அணி செயலர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, கட்சி அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
முகாமை துவக்கி வைத்து, அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'வருங்கால தமிழகமாக இருக்கும் தம்பியை, என் குடும்பத்தில் ஒருவராக தான் பார்க்கிறேன். தம்பி தயாநிதி அன்புமணியை...' என்று கூறியவர், உடனே சுதாரித்து, 'மன்னிக்கவும்... உதயநிதியை' என, திருத்தம் செய்து, பேச்சை தொடர்ந்தார்.
இதைப் பார்த்த பார்வையாளர் ஒருவர், 'இப்பல்லாம் உளறல் பேச்சு அரசியல்வாதிகளுக்கு பேஷனா போச்சு...' என, முணுமுணுக்க, மற்றொருவர், 'பேச்சு வாக்குல உளறலாம்... பெயரை சொல்வதிலுமா உளறுவாங்க... அதுவும் கட்சியின் வருங்கால தலைவர் பெயரை அமைச்சர் இப்படி பந்தாடிட்டாரே... இதுல குடும்பத்தில் ஒருவர்னு வேற தம்பட்டம் அடிச்சுக்கிறாரே...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.