சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் விடுவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி., அனுசுயா டெய்சி எர்னஸ்டுக்கு, 'கொலை செய்து விடுவோம்' என, மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்து பேசியுள்ளனர். மர்ம நபர்கள் மீது நடவடிக்கை கோரி,
டி.ஜி.பி., - சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அவர் புகார் அளித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், 1991ல், முன்னாள் பிரதமர் ராஜிவ், விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர், சமீபத்தில் கருணை அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.இதற்கு, ராஜிவ் கொல்லப்பட்ட அன்று, அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி அனுசுயா டெய்சி எர்னஸ்ட் கருத்து தெரிவித்தார். அந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து மர்ம நபர்கள், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.மர்ம நபர்கள் மீது நடவடிக்கை கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியுடன் சென்று, அனுசுயா நேற்று புகார் அளித்தார்; டி.ஜி.பி., அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.
அதன்பின், அனுசுயா அளித்த பேட்டி:தமிழக காவல் துறையில், 1981ல் எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்து, 37 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து, கூடுதல் எஸ்.பி.,யாக ஓய்வு பெற்றேன். தற்போது, காங்கிரசில் செயலர் பொறுப்பில் உள்ளேன்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்ட இடத்தில், விடுதலைப் புலிகள் மனித வெடிகுண்டு தாக்குதலில், ஒன்பது போலீசார் உட்பட, 18 பேர் கொல்லப்பட்டனர். நான் படுகாயத்துடன் உயிர் தப்பினேன். என் இடது கை பிளந்து விரல்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. என் உடலில் இப்போதும் வெடிகுண்டு சிதறல்கள் உள்ளன. என்னுடன் அப்பாஸ் என்ற, 7 வயது சிறுவன் வந்திருந்தார். இவரின் தாய், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பாஸ் தாய் என்ன பாவம் செய்தார்; விடுதலைப் புலிகள் ஏன் கொன்றனர்?
அடையாளம் காட்டினேன்
சம்பவ இடத்தில் நளினி, சுபா, சிவராஜன் உள்ளிட்டோரை பார்த்தேன். சிறையில், சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய அடையாள அணிவகுப்பில், குற்றவாளி நளினியை எவ்வித தயக்கமும் இன்றி சுட்டிக் காட்டினேன். எனக்கு, 95 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கினர்.
ஆனால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதும், நான் பொய் சாட்சி சொன்னதாக, துாக்குத் தண்டனை குற்றவாளியான நளினி கூறி வருகிறார். அவருக்கு நான் பதில் அளித்து, பேட்டி கொடுத்தேன். ராஜிவ் கொலையாளிகள் விடுதலை செய்யப்படவில்லை; கருணை அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.ராஜிவ் கொல்லப்பட்ட இடத்தில், எந்த தவறும் செய்யாத ஒன்பது போலீசார் துடிதுடித்து இறந்தனர். இதுபற்றி எல்லாம் பேசியதால், வெளிநாடுகளில் இருந்து மர்ம நபர்கள், இணைய அழைப்பை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
அஞ்ச மாட்டேன்
'விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், நளினி பற்றி எல்லாம் பேசக்கூடாது. மீறினால், உன் கழுத்தை அறுப்போம்' என மிரட்டுகின்றனர். நான் காவல் துறையில் பணிபுரிந்தவள்; இந்த மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சுபவள் அல்ல.எனக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள், 'இலங்கைக்கு அமைதிப் படையை ராஜிவ் அனுப்பினார். அவர்கள், தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதனால், ராஜிவ் கொல்லப்பட்டார்' என நியாயம் கற்பிக்கின்றனர். விடுதலைப் புலிகள் கொன்று குவித்த மனிதர்களின் எண்ணிக்கை, கணக்கில் அடங்காதவை. தமிழகத்தில் தங்கி இருந்தபோது, ஒரு போலீஸ்காரர் உட்பட, பலரை கொன்று குவித்தனர்.
மிகவும் ஆபத்து
பயங்கரவாத செயலில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள், தமிழகத்தில் தஞ்சம் புகுந்து விட்டனர்; கல்வி, வேலை வாய்ப்பு என உரிமை கோருவர். இது மிகவும் ஆபத்தானது.உயிர் பயத்தில் வெளிநாடுகளில் பதுங்கி இருப்போர், ராஜிவ் கொலையாளிகள் குறித்து பேசினால், மிரட்டல் விடுக்கின்றனர். இது கோழைத்தனம். ஜாதி குறித்தும் பேசுகின்றனர். இதனால், தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷனிலும் புகார் அளிக்க உள்ளேன்.டி.ஜி.பி., சைலேந்திரபாபு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் குறித்தும், ஆபாசமாக பேசி மிரட்டுகின்றனர். 'ராஜிவை நாங்கள் தான் கொன்றோம்' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி வருகிறார்.
எனக்கு வரும் கொலை மிரட்டல் பின்னணியில் இவரும், ராஜிவ் கொலையாளிகளும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.இவ்வாறு அனுசுயா கூறினார்.இந்நிலையில், 'ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி அனுசுயாவுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்; மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.