தலைநகர் புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், சி.பி.ஐ., அதிகாரி எனக்கூறி போலி ஆவணங்களைக் காட்டி தங்கியிருந்த ஆந்திர நபரை, சி.பி.ஐ., அதிகாரிகள் நள்ளிரவில் வந்து அள்ளிச் சென்றனர்.
பிரதமர் மோடி தலைமையில், அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் 'ஜி - 20' ஆலோசனைக் கூட்டம், வரும் 5ம் தேதி புதுடில்லியில் நடக்கவுள்ள நிலையில், போலி நபர் சிக்கியிருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அவர் பயங்கரவாதசெயலுக்கு திட்டமிட்டாரா, உளவு பார்த்தாரா என்ற கோணத்திலும் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது. தலைநகர் புதுடில்லியில் சாணக்கியபுரியில் அமைந்துள்ளது தமிழ்நாடு இல்லம். தமிழக அரசின் அதிகாரப்பூர்வ மாளிகையான இங்கு தான் முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் புதுடில்லி வரும்போது தங்குவர். இந்த இல்லத்தை நிர்வகிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில் ஓர் அலுவலகமும் இங்கு இயங்குகிறது.
பரிந்துரை குறிப்பு
தமிழ்நாடு இல்லத்தில் தங்க, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்துறை அலுவலகத்திலிருந்து பரிந்துரை வர வேண்டும். கடந்த காலங்களில் அறை ஒதுக்குபவரின் விபரங்களுடன் கடிதம் கொடுத்து அனுப்புவர். தற்போது இணையதளம்வாயிலாகவே பரிந்துரைஅனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 23ம் தேதி, தமிழ்நாடு இல்லத்துக்கு வந்த ஒரு நபர், தன் பெயர் ஸ்ரீனிவாசராவ் என அறிமுகம் செய்து கொண்டார். அங்கிருந்த வரவேற்பு பிரிவு அலுவலர் சிவா, தமிழக பொதுத்துறை இணையத்தில் பார்த்தபோது, 'ஸ்ரீனிவாசராவ், ஐ.பி.எஸ்., சி.பி.ஐ., அதிகாரி' என பரிந்துரை குறிப்பு வந்திருந்தது.
ஆவண சரிபார்ப்புக்காக அடையாள அட்டையை கேட்ட போது, அவர் 'டிரைவிங் லைசென்ஸ்' மட்டுமே கொடுத்தார். சென்னையிலிருந்து வந்த குறிப்புப்படி அவர் ஐ.பி.எஸ்., அல்லது சி.பி.ஐ., அதிகாரிக்கான அடையாள அட்டையை கொடுத்தால் மட்டுமே, அவருக்கு சலுகைக் கட்டணமாக 300 ரூபாய் வாடகைக்கு அறை ஒதுக்க முடியும். இதனால், வெளி நபர்களுக்கு தரப்படும் 2,500 ரூபாய் கட்டணத்தில், அவருக்கு அறை எண் 305 ஒதுக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
இந்நிலையில், ஸ்ரீனிவாசராவ் ஒரு போலி அதிகாரி என்பது புதுடில்லியில் உள்ள சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில், அவர்கள் அதிரடியாக தமிழ்நாடு இல்லத்துக்குள் நுழைந்து, அறை எண் 305ஐ சுற்றி வளைத்தனர். அங்கிருந்த ஸ்ரீனிவாசராவை துாக்கி வண்டியில் ஏற்றினர்.
அந்த அறையை தங்கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சல்லடைபோட்டு அலசினர். பின்,ஸ்ரீனிவாசராவை சி.பி.ஐ., அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது. சி.பி.ஐ., அதிகாரி என பொய் சொல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த ராவ், பயங்கரவாத செயலுக்கு திட்டம் தீட்டினாரா? அல்லது உளவு பார்த்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் 'ஜி - 20' ஆலோசனைக் கூட்டம், வரும் 5ம் தேதி டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடக்கிறது. இந்நிலையில், ஐ.பி.எஸ்., அதிகாரி என்ற பெயரில் ஒருவர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தது எதற்காக என்ற கேள்வி எழுந்து உள்ளது. மேலும், அவர் இங்கு வந்து தங்க, சென்னையில் இருந்து பரிந்துரை அனுப்பிய அதிகாரி யார்? அல்லது அமைச்சர் யாராவது இவருக்கு சிபாரிசு செய்துள்ளனரா எனவும் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.இதனால், தலைநகர் புதுடில்லியில் மட்டுமின்றி, சென்னை தலைமைச் செயலகத்திலும் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், விசாரணையில் கிடைத்த தகவல்களை வெளியிட சி.பி.ஐ., அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
அதிகாரிகள் துாக்கம்
புதுடில்லி தமிழ்நாடு இல்லத்திலும் சி.பி.ஐ., அதிகாரிகள் வந்து ஒருவரை துாக்கிச் சென்றது கூட தெரியாமல் அங்கிருந்த அதிகாரிகள் துாங்கிக் கொண்டிருந்தனர். நேற்று காலையில் சென்னையில் விசாரணை துவங்கிய பிறகே, புதுடில்லி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.இதற்கிடையில், ஸ்ரீனிவாசராவின் லேப்டாப், மொபைல் போன் ஆகியவற்றை, சி.பி.ஐ., அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். அவருக்கு அறை ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு இல்ல அலுவலரான சிவாவும், சி.பி.ஐ.,யின் விசாரணை வளையத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லாமே மர்மம்!
தமிழ்நாடு இல்ல தலைமை உள்ளுறை ஆணையர்களாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதுல்ய மிஸ்ரா, ஆஷிஷ் சட்டர்ஜி ஆகியோர் பதவி வகிக்கின்றனர். இந்த மாளிகை தமிழக அரசுக்கு சொந்தமானது என்பதால், அனுமதி இல்லாமல் எந்த போலீசும் உள்ளே நுழைய முடியாது.எனவே, சி.பி.ஐ., அதிரடியாக உள்ளே புகுந்து, அங்கு தங்கியிருந்த ஒருவரை கைது செய்ய அனுமதித்த அதிகாரி யார் என்ற தகவலும் மர்மமாகவே இருக்கிறது.
பரபரப்புக்கு பதில் பதற்றம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் 'ஜி - -20' ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும்தமிழக முதல்வர் ஸ்டாலின், 5ம் தேதி காலை தமிழ்நாடு இல்லத்துக்கு வருவதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், இங்கு, முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடு நடவடிக்கைக்கு மத்தியில், உச்சகட்ட பதற்றமும், பீதியும் நிலவுகிறது. - நமது டில்லி நிருபர் -