சபாநாயகர் அப்பாவு: அரசியலமைப்பு சட்டத்தை யாரும் எளிதாக கடந்து விடக்கூடாது. இந்தியா மதச்சார்பற்ற, குடியரசு நாடு. அதற்கு எதிராக பொது வெளியில் பேசினால், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கிறோம் என பொருள். ஒரு கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர் ரவி, 'இந்தியா மதச்சார்புள்ள நாடு' என்று பேசியிருக்கிறார்; இது வேதனை அளிக்கிறது. இதை கவர்னர் தவிர்த்திருக்க வேண்டும். கவர்னர் என்ற முறையில், அவர் பொறுப்புடன் பேசியிருக்க வேண்டும்.
டவுட் தனபாலு: நீங்க கூட, ஒரு குறிப்பிட்ட மத அமைப்பினர் நடத்திய விழாவில் கலந்துக்கிட்டு, 'நீங்க எல்லாம் ஓட்டு போட்டு தான் இந்த ஆட்சி அமைஞ்சிருக்குது... அதனால, உங்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தர காத்திருக்கோம்'னு பேசிஇருந்தீங்களே... அந்த பேச்சு, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டதா என்ற, 'டவுட்' அப்ப உங்களுக்கு எழவில்லையா?
மேற்கு வங்க பா.ஜ., மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி: மேற்கு வங்கத்தில், கண்டிப்பாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம். முதல்வர்
மம்தா பானர்ஜிக்கு தைரியம் இருந்தால், அதை தடுத்து நிறுத்தட்டும் பார்க்கலாம்.டவுட் தனபாலு: 'பொது சிவில் சட்டம் அவசியம்' என்பதற்கு, பல தரப்பிலும் ஆதரவு கிடைச்சிட்டு வருது... ஆனா, அதை தேர்தல் வாக்குறுதியாகவும், எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுக்கவும், நீங்க பயன்படுத்துவது தான், அதன் நோக்கத்தை அரசியலாக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: தமிழக அமைச்சரவையை விரைவில் மாற்றி அமைக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இளைஞர் அணி செயலர் உதயநிதி உட்பட, புதிதாக சிலருக்கு அமைச்சர் பதவியும், சில அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகா என்ற யோகமும் அடிக்க உள்ளது.
டவுட் தனபாலு: நம்ம முதல்வர் ஸ்டாலின், கருணாநிதியின் வாரிசாகவே இருந்தாலும், அரசியல்ல படிப்படியாகவே பதவிகளுக்கு வந்தார்... ஆனா, அரசியலுக்கு வந்த மூணே வருஷத்துல, உதயநிதிக்கு 'மளமள'வென பதவி உயர்வுகளை வாரி வழங்குவது, கட்சிக்காக காலம், காலமாக உழைத்த சீனியர்கள்மனதை நோக அடிக்காதா என்ற, 'டவுட்' எழுதே!