நவம்பர் 29, 1989
அரியலுார் மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில், 1920 பிப்ரவரி 13ல், அய்யம்பெருமாள் -- மிளகாயி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் மருதகாசி. கும்பகோணத்தில் பட்டப்படிப்பு முடித்ததும், 'தேவி நாடக சபை'யில், கருணாநிதியின், 'மந்திரிகுமாரி' உள்ளிட்ட நாடகங்களுக்கு பாடல் எழுதினார். கா.மு.ஷெரீபின் நாடகக் குழுவில், திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கு, இவர் எழுதிய பாடல்கள் புகழ் பெற்றன.
சேலம் மாடர்ன் தியேட்டர்சின், மாயாவதி திரைப்படத்தில், 'பெண் எனும் மாயப் பேயாம்' என்ற பாடலை எழுதி, திரையுலகில் நுழைந்தார். தொடர்ந்து, மந்திரி குமாரி படத்துக்காக எழுதிய, 'வாராய் நீ, உலவும் தென்றல்' உள்ளிட்ட பாடல்கள் பிரபலமடைந்தன. தொடர்ந்து, துாக்குத் துாக்கி, மங்கையர் திலகம், தாய்க்குப் பின் பாசம், தாய் மீது சத்தியம் உள்ளிட்ட படங்களுக்கும் பாடல்கள் எழுதினார்.
இவருக்கு, ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் விரும்பி வாய்ப்பளித்தனர். இவரின் பாடல்கள் மற்றும் நுால்களை, முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசுடைமையாக்கி, 45 லட்சம் ரூபாய் வழங்கினார்.
மருதகாசி, 1989ல் இதே நாளில், தன், 69வது வயதில் மறைந்தார். மெட்டுக்கு மெருகூட்டிய திரைக்கவி திலகத்தின் நினைவு தினம் இன்று!