கோவை:'கோவை மாநகராட்சி பகுதிகளில், செப்டிக் டேங்க் கழிவுகளை மனிதர்கள் மூலமாக அகற்றக்கூடாது' என, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் எச்சரித்துள்ளார்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் தடை சட்டம் 2013ன் படி, பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, மனிதர்களை ஈடுபடுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை மேற்கொள்ள, மாநகராட்சி சார்பில் போதுமான கழிவு நீர் உறிஞ்சு வாகனங்
கள் மற்றும் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், இதர நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில், தன்னிச்சையாக மனிதர்களை மறைமுகமாகவோ, நேரடியாக ஈடுபடுத்தக்கூடாது.
சட்டத்தை மீறி செயல்பட்டால், போலீசார் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இச்செயலால் உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்படும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தலா ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கும் பொறுப்பு, சம்பந்தப்பட்டவர்களையே சாரும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.