அவிநாசி:விளம்பர சுவரொட்டிகள் ஒட்டி வைக்கப்பட்டு, 'பளிச்' ஆக்கப்பட்ட நெடுஞ்சாலை மையத்தடுப்பில், கொஞ்சமும் பொறுப்புணராமல், ஆளுங்கட்சியினர் சுவரொட்டிகளை ஒட்டி வைத்துள்ளனர்.
அவிநாசி -- கோவை பிரதான ரோட்டில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள மையத்தடுப்பில், பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ, பொதுநல அமைப்பினர் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டி வைத்து, அலங்கோலமாக்கியிருந்தனர்.
நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில், அவை அகற்றப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு புதுப்
பொலிவாக்கப்பட்டது. இருப்பினும், அந்த மையத்தடுப்பில், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மீண்டும் விளம்பர சுவரொட்டி ஒட்டி வைத்து, அலங்கோலமாக்கியுள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:பொது இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என, அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், அதை பின்பற்ற வேண்டிய ஆளுங்கட்சியினரே, பொறுப்பில்லாமல், மையத்தடுப்பின் மீது விளம்பர சுவரொட்டி ஒட்டி வைத்திருப்பது, ஏற்புடையதல்ல.
மாற்றுக்கட்சியினரும், இதே தவறை செய்ய, இது முன்னுதாரணமாக மாறிவிடும். அரசியல் கட்சியினர் தங்களின் பொறுப்புணர வேண்டும். இத்தகைய தவறு செய்வோர் மீது, பாராபட்சம் பார்க்காமல், சம்மந்தப்பட்ட துறையினர் அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு
அவர்கள் கூறினர்.