போபால் :மத்திய பிரதேசத்தில் உள்ள வங்கியில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்; மீதி நால்வரை தேடி வருகின்றனர்.
ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கட்னி மாவட்டத்தின் பர்கவான் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் நுழைந்த கொள்ளையர், துப்பாக்கி முனையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தையும், 3.50 லட்சம் ரூபாயையும் கொள்ளை
யடித்துச் சென்றனர். இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இக்கும்பலைச் சேர்ந்த இருவரை பீஹாரில் கைது செய்துள்ளனர். இதுகுறித்து கட்னி மாவட்ட எஸ்.பி. ஜெயின் கூறியதாவது:கட்னியில் நடந்த தங்க கொள்ளையில் ஈடுபட்டோர் பீஹாரைச் சேர்ந்தவர்கள். இவர்களில் இருவர் அம்மாநில போலீசார்
உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் இதே போல முன்பும், வங்கி ஒன்றிலிருந்து 300 கிலோ தங்கத்தை கொள்ளையடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இக்கும்பலுக்கு பீஹாரின் தன்பாத், உ.பி.,யின் ஆக்ரா மற்றும் மேற்கு வங்கத்தின் ஹவுரா உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களிலும் தொடர்பு உள்ளதாக தெரிகிறது. இக்கும்பலைச் சேர்ந்த மீதி நால்வரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.