மும்பை :மஹாரஷ்டிராவில் நடந்த யோகா முகாமில் பேசும்போது, பெண்கள் குறித்து அவதுாறான கருத்து தெரிவித்ததற்காக, யோகா குரு பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரினார். மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானே மாவட்டத்தில் யோகா குரு பாபா ராம்தேவின் யோகாசன முகாம் நேற்று முன்தினம் நடந்தது.
அவர், இந்நிகழ்ச்சியில் பேசும்போது, 'பெண்கள் சேலையிலும், சல்வாரிலும் அழகாக இருப்பர்; ஆடை அணியாவிட்டாலும் அழகு தான்' என,தெரிவித்தார்.இந்த கருத்துக்கு, மஹாராஷ்டிரா மகளிர் ஆணையம் உட்பட பல்வேறு மாநில மகளிர் ஆணையங்கள் கண்டனம் தெரிவித்தன.
இந்த அவதுாறு கருத்து குறித்து பாபா ராம்தேவ் இரண்டு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி, மஹாராஷ்டிரா மகளிர் ஆணைய தலைவர் ரூபாலி சகன்கர், 'நோட்டீஸ்' அனுப்பினார். இதையடுத்து பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரினார்.
இதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
சமூகத்தில் பெண்கள் மரியாதைக்குரிய இடத்தைப் பெற வேண்டும் என்பதற்காக நான் எப்போதும் உழைத்து வருகிறேன். பெண்களை மேம்படுத்தும் மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறேன். எனவே, பெண்களை அவமரியாதை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் 'வீடியோ'வால் யாராவது புண்பட்டு இருந்தால், மன்னிப்பு கோருகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.பெண்கள் குறித்து பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்த கூட்டத்தில், மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிசின் மனைவி அம்ருதா பட்னவிஸ் மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும், எம்.பி.,யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் பங்கேற்றனர்.'இவர்கள் ஏன் அந்த கருத்துக்கு உடனடியாக தங்கள் எதிர்ப்பை
தெரிவிக்கவில்லை' என, சிவசேனா தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.