உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
எஸ்.மணி, துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்' என்று கூறினார் அண்ணாதுரை. முதல்வர் ஸ்டாலினோ, 'ஏழையின் சிரிப்பில், நான் கருணாநிதியை காண்கிறேன்' என்கிறார். ஆனால், 'தி.மு.க., ஆட்சியில் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறது, ஏழைகளின் வாழ்க்கை' என்று, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்ற ஒரு சொலவடை உண்டு. அதுபோல, கழகத்தில் உள்ள மற்றவர்களுக்கு எப்படியோ, முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டும், 'கடவுள், இறைவன், தெய்வம்' போன்ற, ஹிந்து மதக் கடவுளர்களை குறிப்பிடும் வார்த்தைகளைக் கேட்டாலே, உடம்பு பற்றி எரியும்; பேயை கண்டது போல உடல் நடுங்கும். அதேநேரத்தில், ரட்சகர், இறைதுாதர் போன்ற சொற்கள் காதில் விழுந்தால், அவருக்கு புல்லரிக்கும்; மெய் சிலிர்க்கும்.
![]()
|
அந்த எரிச்சலின் விளைவு தான், 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்; ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன்' என்று, தி.மு.க.,வின் ஸ்தாபகர் அண்ணாதுரை கூறிய வசனங்கள் கூட, ஸ்டாலினுக்கு வேம்பாக கசக்கிறது; இறைவன் என்ற வார்த்தையை சொல்லவும் நா கூசுகிறது. ஏழைகளின் சிரிப்பில் ஸ்டாலின் கண்களுக்கு வேண்டுமானால், கருணாநிதி தெரியலாம். உண்மையில், அந்த கருணாநிதி சிரித்த சிரிப்பால், தமிழகத்தில் உள்ள ஏழைகள் மட்டுமல்ல... தமிழகமே சிரிப்பாய் சிரித்தபடி தான் உள்ளது.
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும், அவர்கள் எந்த ஜாதி, மதம், இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி... இறைவன் என்ற வார்த்தை, 'துணைவன்' என்ற கோணத்திலேயே பார்க்கப்படும். கருணாநிதியின் குமாரன் ஸ்டாலினுக்கு மட்டும், இறைவன் என்ற வார்த்தை, 'பகைவன்' ஆகத் தெரிகிறது!