சென்னை: வங்கிக் கணக்கு இல்லாத 14.60 லட்சம் கார்டுதாரர்களுக்கு ஒரு வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவக்கும் பணியை முடிக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் முன்னோட்டமாக ஜனவரியில் பொங்கல் பரிசு தொகையில் இடம்பெற உள்ள பணத்தை கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மத்திய அரசின் 'ஆதார்' எண் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. எனவே கார்டுதாரர்களின் ஆதார் எண், ரேஷன் கார்டு எண், வங்கி கணக்கு எண் இணைக்கப்பட்டுள்ளன.
ஆதார் எண் அடிப்படையில் ஆய்வு செய்ததில் மொத்தம் உள்ள 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களில் 14.60 லட்சம் பேருக்கு வங்கி கணக்குகள் இல்லாத விபரத்தை அரசு கண்டறிந்துள்ளது. அவர்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கை துவக்க நடவடிக்கை எடுக்குமாறு மண்டல இணை பதிவாளர்களிடம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சமீபத்தில் தெரிவித்தார்.
![]()
|
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக மண்டல இணை பதிவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். அதில் வங்கி கணக்கு இல்லாத 14.60 லட்சம் கார்டுதாரர்களுக்கு ஒரு வாரத்திற்குள் அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கணக்கு துவக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழக அரசு குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்க உள்ளது. வரும் 2023 ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு அரிசி கார்டுதாரர்களுக்கு 1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் முன்னோட்டமாக ஜனவரியில் பொங்கல் பரிசு தொகையில் இடம்பெற உள்ள பணத்தை கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்காகவே வங்கி கணக்குகளை விரைந்து துவக்கும் பணியில் அரசு ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.