"அட்டா! மழை வருதே, சிறகுகள் நனைஞ்சிடுமே! வாங்க... சீக்கிரம் கூட்டுக்குள்ளே போயிடலாம்!' இவைகள் சவாங்களை சந்திக்க அஞ்சும் குருவிகள்.
"மழை வந்தா நாம ஏன் கூட்டுக்குள்ளே போகணும்! மேகத்துக்கு மேல பறந்தா என்ன?' இவைகள் வலுவான மனம் கொண்ட கழுகுகள்!
"சிறகுகள் பறப்பதற்கு தானே தவிர, பதுங்குவதற்கு அல்ல!' என எண்ணும் கழுகுகள் போல்தான் இவரும். அதனால்தான் வெற்றிகளை துரத்துபவர்கள் மத்தியில் மாறுபட்டு நிற்கிறார். வெற்றிகள் துரத்த தன் சாதனை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இவர் வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி வேல்முருகன்.
உங்களோட சின்ன, சின்ன ஆசைகளை பத்தி தெரிஞ்சுக்கலாமா?
எத்தனை பிறவி எடுத்தாலும், என் அம்மா குஞ்சரவள்ளிக்கே மகனா பிறக்கணும். மனசுக்குள்ளேயும், வெளியேயும் என்னை நினமாகவே சிரிக்க வைச்சு அழகான வாழ்க்கையை எனக்கு கொடுத்தருக்கிற என் மனைவி மலர் மங்கை, மகன்கள் கார்த்திக், விவேகானந்தன் எப்பவும் சந்தோஷமா இருக்கணும். எண்ணிக்கையில் குறைவா இருந்தாலும், மனசுக்கு நிறைவு கொடுக்குற என் நண்பர்கள் இப்ப இருக்கற மாதிரியே, எப்பவும் என்கூட இருக்கணும். "உங்க கல்வி நிறுவனத்துல படிச்சதால, இன்னைக்கு நான் இந்த உயரத்துல் இருக்கிறேன்!'னு சொல்ற மாணவர்கள் எண்ணிக்கை லட்சங்களா உயர்ந்து, கோடிகளா மாறணும். இதைத்தவிர... ரஜினிகாந்த் நிறைய படங்கள்ல நடிக்கணும். இசைஞானியோட பாடல்கள் மறுபடியும் நிறைய வரணும். புதுப்புது உணவுகள் நிறைய அறிமுகமாகணும். அத்தனையும் என் கவனத்துக்கு தப்பாம வரணும்.
உங்க மாணவர்களை சாதனையாளர்களா பார்க்க விருப்பமா? நல்ல மனிதர்களா பார்க்க விருப்பமா?
நியூயார்க்ல இருந்து எனக்கு போன் பண்றாரு குணரஞ்சன். "சார், நான் இப்போ எல்லோ ஸ்டோன் பூங்கா வாசல்ல இருக்கறேன். "இந்த உலகத்தில் பார்க்க வேண்டிய பெரிய பூங்கா!'ன்னு புத்தகத்துல படிச்சது. இன்னைக்கு அதை நான் பார்க்க வந்திருக்கேன்னா, அதுக்கு காரணம் நீங்க! ரொம்ப நன்றி சார்!' குணரஞ்சனோட வார்த்தைகள்ல மனசு நிறைஞ்சு போச்சு. இப்போ சொல்லுங்க! நல்ல படிச்சு, அமெரிக்காவுல இருக்கற குணரஞ்சன் சாதனையாளரா? இல்லை... உயர்த்தி விட்ட குருவுக்கு நன்றி சொல்ற பண்புள்ளவரா? "என் மகன் சாதனையாளர்!'னு சொல்லிக்கறது பெத்தவங்களுக்கும், நண்பர்களுக்கும் வேணும்னா சந்தோஷமா இருக்கலாம். ஆனா, "என் மாணவன் பண்புள்ளவன்!'னு சொல்லிக்கிறதுலதான் ஒரு ஆசிரியருக்கு பெருமை. எனக்கு அந்த பெருமையை பல மாணவர்கள் கொடுத்திருக்காங்க. இன்னும் கொடுப்பாங்க.
விட்டுக்கொடுப்பதில் சிறந்தவர்கள் ஆண்களா? பெண்களா?
ஆணா இருந்தாலும், பெண்ணா இருந்தாலும் விட்டுக்கொடுக்கறவங்கதான் சிறந்தவங்க. இந்த பெருமை, கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் பெண்கள்கிட்ட இருந்தது. ஆனா, இப்போ.. நிலைமை மாறியிருக்கு. பெண்குழந்தை மட்டுமே இருக்கற வீடுகள்ல, அந்த குழந்தையை ஆண் குழந்தைக்கு நிகராக வளர்க்குறாங்க. இதனால, பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளுக்கு நிகரா எதிர்த்து நிற்க ஆரம்பிச்சுட்டாங்க. இல்லற வாழ்க்கையில, "ஆண் விட்டுக் கொடுத்தாதான் குடும்பத்துல நிம்மதி!'ங்கற நிலைமை வந்துடுச்சு. வகுப்பறையிலேயும், மாணவர்கள் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் உருவாயிடுச்சு. அதனால, இப்போதைக்கு விட்டுக்கொடுப்பதால் சிறந்தவர்கள் ஆண்கள்தான்.
"மத்தவங்களுக்காக வாழ்ந்தது போதும்! இனி, நமக்குன்னு ஒரு வாழ்க்கையை வாழணும்!' இப்படி ஒரு எண்ணம் வந்ததுண்டா?
ஒரு சராசரி மனிதனோட அடிப்படை தேவைகள் நிறைவேறிடுச்சுன்னாலே, அதுக்கப்புறம் அவன் தனக்காக வாழ மாட்டான். 17 வயசுல இந்த துறைக்கு வந்து எனக்கு, 25 வயசுக்குள்ளே எல்லாம் கிடைச்சுது. அதனால் சுயநலம் ஒழிங்சது. உலகத்தை புதுகோணத்தல பார்க்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு என்கிட்டே வேலைபார்க்குற ஒரு ஏழைத்தாயோட மகளுக்கு. ஒரு பைசா வாங்காம பொறியியல் சீட் கொடுக்க முடியுது. யாருக்கு வேலை தேவை!ன்னு சரியா தெரிஞ்சுகிட்டு, அவங்களுக்கு வேலை கொடுக்க முடியுது. இருட்டுல இருக்கறவங்களோட வாழ்க்கையில, வெளிச்சம் கொடுக்க வைச்ச பதவி இது. மனசுக்கு நிறைவா இருக்கு. இனிமே, இதுதான் என் வாழ்க்கை!
மின்னல் கேள்விகள்.. மின்னும் பதில்கள்...
ஒரு மனிதனின் மரணம் அர்த்தப்படுவது எப்போது?
உறவுகளின் விழிகள் மட்டும் அல்லாமல், ஊராரின் விழிகளும், கன்னங்களும் நனைந்தால் மட்டுமே.. இறந்தவன் மனிதனாக வழ்ந்திருக்கிறான்! என்று அர்த்தம்.
சுத்த தங்கம்?
முத்துராமலிங்கம், இதுவரை, இவர் சொல்லி எதையுமே நான் உடனடியாக ஒப்புக் கொண்டதில்லை. இருந்தாலும், மண்ணை முட்டும் விதையாக என்னை நினைத்து பெருமைப்படும் என் மதிப்பிற்குரிய தந்தை.
இதமான தென்றல், குழந்தைகளின் பிஞ்சு விரல் எந்த தீண்டலில் சுகம் அதிகம்?
இதமான தென்றல் உடலுக்கு வேண்டுமானால் சுகம் தரலாம். ஆனால், பிஞ்சு விரல் தீண்டும்போதுதான் உயிர் சுகம் பெறும். என் பிள்ளைகளின் மூலம் இந்த சுகத்தை நான் முழுமையாக அனுபவித்திருக்கிறேன்.
இன்றைய மாணவர்கள் பற்றி?
மற்றவர்களை எளிதில் புரிந்துகொள்ளும் திறமை, தன்னை மேம்படுத்தி கொள்ளும் ஆற்றல், தீராத தேடல், உலகத்தை தன் பக்கம் திருப்ப வேண்டும் என் வேட்கை... மாணவர்களே! உங்களை வியக்கிறேன்.
எதிர்காலத்தில் உங்கள் மாணவர்களில் ஒருவர் தமிழக முதல்வரானால்?
"தமிழகத்தின் வளமையையும், திமழனின் பெருமையையும் உலகறியச் செய்யும் வகையில் திட்டங்களை தீட்டு. தமிழனை பெருமைப்பட வை!' என் வேண்டுகோள் வைப்பேன்.
காலங்களால் அழியாத ஒன்று? அழிக்க முடியாத ஒன்று?
அடுத்தவர்களுக்கு பயன்தரும் எந்த காரியமுமே காலத்தின் சுழலில் சிக்காது. அதனால்தான் இந்த துறையை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உல்கள் கேள்விக்கான பதில்... கல்வி.
வரலாறு
1986ம் வருடம் துவங்கப்பட் வேலம்மாள் கல்வி நிறுவனத்தின் தலைவர் முத்துராமலிங்கம். சென்னை மற்றும் மதுரையில் 14 பள்ளிகள், 3 பொறியியல் கல்லூரிகள் என பிரம்மாண்டமாய் கிளை பரப்பி நிற்கு இந்நிறுவனத்தில் 60,000 மாணவர்கள் பயில்கிறார்கள். 2013 ஆண்டு, சிறப்பு மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரியை மதுரையில் நிறுவும் இலக்கோடு பயணிக்கிறது வேலம்மாள் கல்வி நிறுவனம்.
- துரைகோபால்