பெரியகுளம்: குடி குடியைக் கெடுக்கும்' என்பதை நிரூபிக்கும் வகையில், பெரியகுளத்தில், மது போதைக்கு ஆளான தந்தை தாக்கியதால், மனைவி மற்றும் மகளான பயிற்சி பெண் டாக்டர் தற்கொலைக்கு முயன்றனர். இதில், பெண் டாக்டர் பலியானார்; தாய் கவலைக்கிடமாக உள்ளார்.
தேனி மாவட்டம், பெரியகுளம், லட்சுமிபுரம் காளியம்மன் தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 58; விசாகப்பட்டினத்தில் கப்பலில் மீன் பிடிக்கும் பணியாளராக, ஆறு ஆண்டுகளுக்கு முன் வேலை செய்து வந்தார். மது போதையில் மனைவி சுமித்ரா, 49, மகள் மதுமிதா, 26, ஆகிய இருவரையும் அடிக்கடி அடித்து துன்புறுத்துவது இவரது வழக்கம். பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் முடித்து, வெளிநாட்டு மருத்துவ பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மூன்று மாதங்களாக மதுமிதா, பயிற்சி டாக்டராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில், மதுபோதைக்கு அடிமையான நாராயணசாமி, தன் மனைவி, உறவினர்களிடம் பணம் கடன் வாங்கி, மது குடித்து வந்து உள்ளார். ஆறு ஆண்டுகளாக சரி வர வேலைக்கு செல்லாத அவர், சில நாட்களாக மனைவி சுமித்ராவின் பெற்றோர் கட்டிக் கொடுத்த வீட்டை விற்று, பணம் தரும்படி வலியுறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக, மனைவி, மகளுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்; மனைவி மற்றும் மகளை அவர் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த சுமித்ரா, நேற்று முன்தினம் வீட்டு படுக்கையறையில் துாக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். அதே நேரம், மகள் மதுமிதா, செடிகளுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இதை கவனித்த சுமித்ரா, துாக்கு போடும் முடிவை மாற்றி, கைவசம் இருந்த சர்க்கரை நோய் மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
மயக்கமுற்ற இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மதுமிதா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தாய் சுமித்ராவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாராயணசாமியிடம் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு விசாரிக்கிறார்.
மாணவிக்கு 'தொந்தரவு'; தலைமை ஆசிரியர் கைது
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கரைமேடு கிராமத்தில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, பொறையாறு, யாதவர் தெருவைச் சேர்ந்த சாமுவேல் செல்லதுரை, 54, தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளி மாணவி ஒருவருக்கு, இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த மாணவி, தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தாய், சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் நேற்று மாலை, தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரையை கைது செய்தனர்.
முதியவரை கொன்ற 2 வாலிபர்கள் கைது
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, நத்தம் கருப்பூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 65. இவர், கும்பகோணம் காந்தி பூங்கா பகுதியில் சாலையோரத்தில் வசித்து வந்தார். நேற்று காலை, அவர் இறந்து கிடப்பதாக பொதுமக்கள், கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜேந்திரன் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினர்.
காந்தி பூங்கா பகுதியில் உள்ள கேமராவை ஆய்வு செய்த போது, ராஜேந்திரன் துாங்கும் இடத்தில் மது குடித்துக் கொண்டிருந்த இருவரை திட்டியுள்ளார்.
ஆத்திரமடைந்த இருவரும் மது போதையில், ராஜேந்திரனை தாக்கி, சாலையோரத்தில் தள்ளி விட்டு சென்றது தெரிய வந்தது. இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்தது. கேமராவில் பதிவான காட்சியைக் கொண்டு, கும்பகோணத்தைச் சேர்ந்த பாலமுருகன், 32, ஜெயங்கொண்டம் விக்னேஷ், 27, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தேசிய நிகழ்வுகள்:
மகனுடன் சேர்ந்து கணவரை 10 துண்டாக வெட்டிய பெண்
புதுடில்லி: புதுடில்லியில், மகனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, உடலை 10 துண்டுகளாக வெட்டி 'பிரிஜ்'ஜில் வைத்து, பின் அவற்றை இரவு நேரங்களில் குப்பை தொட்டிகளில் வீசியெறிந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
![]()
|
ஆசிரியைக்கு தொல்லை: 4 மாணவர்கள் கைது
மீரட்: உத்தர பிரதேசத்தின் மீரட் அருகே ரத்னா இனாயத்பூர் என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பணிபுரியும் 27 வயது ஆசிரியை போலீசில் கொடுத்த புகார்: கடந்த சில மாதங்களாக பிளஸ் 2 படிக்கும் நான்கு மாணவர்கள் என்னிடம் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். என்னைப் பற்றி அவதுாறாக பேசி 'வீடியோ' எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும், பள்ளிக்குள் நான் நுழையும் போது என்னைப் பார்த்து, 'ஐ லவ் யூ' என்று கூறி தொந்தரவு செய்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், நான்கு மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறார் காப்பகத்தில் அடைத்தனர்.
உலக நிகழ்வுகள்:
நிலச்சரிவு: குழந்தை உட்பட 21 பேர் பலி
மிலன்: இத்தாலி மற்றும் கேமரூன் நாடுகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பிறந்து மூன்று வாரங்களே ஆன குழந்தை உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க ஏரியில் மூழ்கி தெலுங்கானா மாணவர்கள் பலி
ஹூஸ்டன்: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த உதேஜ் குன்டா, 24, சிவ கெல்லிகரி, 25 இருவரும், அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள பல்கலையில் படித்து வந்தனர். கடந்த 26ம் தேதி அங்குள்ள ஓசர்க்ஸ் ஏரிக்கு சென்றனர். முதலில் ஏரியில் குதித்த உதேஜ் ஆழமான பகுதிக்கு சென்று தத்தளித்தார். அவரைக் காப்பாற்ற கெல்லிகரி ஏரியில் குதித்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக இருவருமே நீரில் மூழ்கினர். மீட்புப் படையினர் வந்து, இரண்டு மணி நேரத்துக்குப் பின், உதேஜ் உடலை கண்டுபிடித்தனர். கெல்லிகரியின் உடல் மறுநாள்தான் கிடைத்தது.