நாகர்கோவில்: ஆசிரியைகள் எடுக்கும் கணித பாடம் மறக்காமல் இருக்க, நாகர்கோவில் நகர் கவிமணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர், அதை காகிதத்தில் எழுதி, பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் தொங்க விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆசிரியைகள் நடத்தும் கணித பாடங்களின் சிரமமான பகுதிகளை பேப்பரில் எழுதி பள்ளி வளாகத்தில் உள்ள மூங்கில் மரத்தில் மாணவியர் தொங்க விட்டு வருகின்றனர். பள்ளி இடைவேளை நேரங்களில் இந்த பகுதியில் வரும் மாணவியர், அதை பார்க்கும் போது, எழுதி தொங்க விட்ட பாடம் மனதில் பதிவதாக தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு மாணவியர் செய்த பின் மதிப்பெண்ணும் அதிகரித்ததால் ஆசிரியைகளும் அதை ஊக்குவிக்கின்றனர். இதனால் தினமும் புதிது புதிதாக கணக்கு குறிப்புகள் மரத்தில் தொங்குகின்றன. இதை பார்க்க இடைவேளை நேரத்தில் அதிக மாணவியர் கூட்டமும் வருகிறது.
கோவில்களில் மரத்தில் வேண்டுதலுக்காக தொட்டில், வேண்டுதல் கடிதங்கள் தொங்குவது போல திறமையை வளர்க்கவும், அதிக மதிப்பெண் பெறுவதற்காகவும் மாணவியர் எடுத்துள்ள இம்முயற்சி வித்தியாசமாக உள்ளது.