சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளை அறிவித்ததற்காக, சென்னை மாநகர தமிழ் சங்க தலைவர் பாரதி சுகுமாரன், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., பெயரில், ஆண்டுதோறும் சிறந்த இதழியலாளர்களுக்கு விருது வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழ் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று, தமிழ் வளர்ச்சித்துறை ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளை, மீண்டும் வழங்க முன் வந்ததற்கு, தமிழ் அமைப்புகள் சார்பில், முதல்வருக்கு நன்றி. பல்வேறு அறிஞர்கள், ஆளுமைகள் பெயரில் விருதுகள் வழங்கி வரும் அரசு, குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க காரணமாக இருந்தவரும், இதழியல் துறையில் தனி முத்திரை பதித்தவருமான, 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., பெயரில், ஆண்டுதோறும் சிறந்த இதழியலாளர்களுக்கு விருது வழங்க வேண்டும்.

திரைப்படப் பாடல்கள் வழியே, பாமர மக்களிடமும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய, பட்டுக்கோட்டையார் பெயரில், பாடலாசிரியர்களுக்கு விருது வழங்க வேண்டும். அரசின் உயரிய இலக்கிய விருதாளர்களுக்கு, கனவு இல்லம் வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்த அறிவிப்பை, முறையாக அமல்படுத்த வேண்டும்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வழியாக, திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன் போன்றவர்களின் பெயர்களிலான உயரிய இலக்கிய விருதுகள் பெற்ற அனைவருக்கும், முதல்வரின் கனவு இல்ல திட்டத்தை விரிவுபடுத்தி, அவர்களையும் பெருமைப்படுத்த வேண்டும். இவ்வாறு பாரதிசுகுமாறன் தெரிவித்துள்ளார்.