மதுரை: தென் மாவட்டங்களில் முதன்முறையாக, மதுரை சிறையில் கைதிகளுடன் உறவினர்கள், 'இன்டர்காமில்' பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை மாவட்ட சிறைகளிலும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை மத்திய சிறையில், 1,850 கைதிகள் உள்ளனர். சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில், தினமும் கைதிகளை உறவினர்கள், வழக்கறிஞர்கள் சந்தித்து பேச அனுமதிக்கப்படுகின்றனர். கைதிகள் - உறவினர்கள் சந்திக்கும் அறையில், இரு கம்பி வலைகளுக்கு இடையே சில அடி துாரத்தில் இருந்து, 10 நிமிடங்கள் பேச அனுமதிக்கப்படுவர்.
ஒரே நேரத்தில், 10க்கும் மேற்பட்ட கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதால், இரைச்சல் அதிகமாக இருக்கும்; சத்தம் போட்டு பேச வேண்டியிருக்கும்.
இதை தவிர்க்க போன் வசதி செய்யப்பட வேண்டும் என, 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக, 70 ஆயிரம் ரூபாய் செலவில் உறவினர்கள் நிற்கும் இடத்தில், 'பைபர் கிளாஸ்' அமைக்கப்பட்டு, 'இன்டர்காம்' வழியே கைதிகளிடம் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறை கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் தலைமையில், டி.ஐ.ஜி., பழனி துவக்கி வைத்து கூறியதாவது: புழல், கோவை சிறையை தொடர்ந்து, சிறைத்துறை தலைவர் அமரேஷ் பூஜாரி அறிவுறுத்தல்படி, தென் மாவட்டங்களில் முதன்முறையாக மதுரை சிறையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஒரே நேரத்தில், 17 கைதிகளுடன் உறவினர்கள் பேசலாம். குறிப்பாக, கைதிகளின் குழந்தைகள், வயதான உறவினர்கள் சிரமமின்றி பேசலாம். வழக்கறிஞர்களும் இன்டர்காமில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வசதி மாவட்ட சிறைகளிலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.