சென்னை: 'தமிழகத்தில் கிடைத்து உள்ள சாதகமான சூழலை வீணாக்கினால், வரலாறு மன்னிக்காது' என, பா.ஜ.,வுக்கு, ஆர்.எஸ்.எஸ்., எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அடுத்த ஓராண்டில் இணைந்து செயல்படுத்த வேண்டிய செயல் திட்டங் களை வகுப்பதற்காக, ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின், மாநில அளவிலான இரண்டு நாட்கள் முகாம், சென்னை, அண்ணா நகரில் 26, 27 தேதிகளில் நடந்தது. 'சமன்வய பைட்டக்' என்றழைக்கப்படும் இந்த முகாமில், ஆர்.எஸ்.எஸ்., இணைப் பொதுச்செயலர் மன்மோகன் வைத்யா, தென்னிந்திய தலைவர் வன்னியராஜன், செயலர் ராஜேந்திரன்.
அமைப்பாளர் செந்தில், மாநில அமைப்பாளர்கள் ரவிகுமார், ஆறுமுகம், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகம், மகளிரணி தேசிய செயலர் வானதி, சட்டசபை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அறிக்கை:
மேலும், ஹிந்து முன்னணி, வி.எச்.பி., - ஏ.பி.வி.பி., உள்ளிட்ட 30க்கும் அதிகமான சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த, 170 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த முறை பா.ஜ.,வில் இருந்து மாநில பொதுச்செயலர்கள் கருப்பு முருகானந்தம், சீனிவாசன், பாலகணபதி, கார்த்தியாயினி, ஏ.பி.முருகானந்தம், மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அழைக்கப்பட்டு இருந்தனர்.
முதல் நாளான சனிக் கிழமை, பா.ஜ., உள்ளிட்ட அமைப்புகளின் மாநில அமைப்பு பொதுச்செயலர்கள், கடந்த ஓராண்டில் சாதித்தவை, சந்தித்த சவால்கள் குறித்தும், அடுத்த ஓராண்டில் திட்டமிட்டுள்ள செயல் திட்டங்கள் குறித்தும், அறிக்கை அளித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்., இணைப் பொதுச்செயலர் மன்மோகன் வைத்யா பேசியதாவது: சங் பரிவார் அமைப்புகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்., என்ற தாயின் பிள்ளைகள். ஒவ்வொரு பிள்ளையும் தனித்து, சாதிக்க வேண்டும் என்பது தான் தாயின் விருப்பமாக இருக்கும்.
அதுபோல, ஒவ்வொரு அமைப்பும் தமிழகத்தில் வலுவாக இருக்க வேண்டும். அதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்., என்ற தாயின் விருப்பம். சில அமைப்புகள் பெயரளவில் மட்டுமே செயல்படுகின்றன; அந்நிலை மாற வேண்டும்.

என்னதான் இயக்கம் வளர்ந்தாலும், மாநிலத்தில் அரசியல் அதிகாரம் இல்லாமல், எதையும் சாதிக்க முடியாது. அதற்கு கர்நாடகா, சிறந்த உதாரணம். எனவே, தமிழகத்திலும் அரசியல் அதிகாரத்தைப் பெற, அனைத்து அமைப்புகளும் உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
ஆலோசனை:
அண்ணாமலை, கேசவ விநாயகம், வானதி உள்ளிட்ட பா.ஜ., முக்கிய நிர்வாகிகளுடன், மன்மோகன் வைத்யா தனியாக ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது, 'தனி மனித ஒழுக்கம் சார்ந்து வெளிவரும் செய்திகள், தனி மனிதர்களை மட்டுமல்ல, இயக்கத்தையும் சேர்ந்தே பாதிக்கும். இதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
'கடந்த, 2021 சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு சாதகமான சூழல் உள்ளது. தி.மு.க., மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், வரலாறு நம்மை மன்னிக்காது' என, அவர் கூறியதாக தெரிகிறது.
அண்ணாமலையின் செயல்பாடுகளை பாராட்டிய மன்மோகன் வைத்யா, 'தமிழக அரசியல் களத்தில் பா.ஜ., முக்கிய சக்தியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்க வேண்டும். 'நம் அரசியல் எதிரிகளும், சித்தாந்த எதிரிகளும் வலுவானவர்கள். அவர்களுக்கு எல்லை கடந்த சக்திகளும் உதவி வருகின்றன. எனவே, எச்சரிக்கையுடன் களப்பணியாற்ற வேண்டும்' என அறிவுறுத்தியதாக, ஆர்.எஸ்.எஸ்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.