வாரணாசியில் 'பிளாஸ்டிக் டீ கப்'களுக்கு 'குட்பை' சொன்ன அதே வேளையில், ஹிந்து மத நம்பிக்கைகளில் சில விஷயங்கள், 'பிளாஸ்டிக்' மயமாகி வருகின்றன.
தமிழகத்திற்கும், காசிக்கும் இடையிலான பழங்கால பிணைப்பை மீட்கும் வகையில் நடத்தப்படும் 'காசி தமிழ்ச் சங்கமம்' நிகழ்ச்சி, தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வயது வித்தியாசம், கட்சி பாகுபாடு, மத வேறுபாடின்றி பலரும், இந்திய கலாசாரம் என்ற ஒன்றை மட்டுமே நேசித்து, சங்கமத்தில் இணைந்தனர்; பலர் இணைய காத்திருக்கின்றனர்.
காசி மற்றும் அயோத்தியில் ஒரு பக்கம், பிளாஸ்டிக்கிற்கு பதிலாக மண் குடுவை பயன்படுத்தப்பட்ட நிலையில், மறுபக்கம், வழிபாட்டில் சில
விஷயங்கள் பிளாஸ்டிக் மயமாகி உள்ளன. திருஷ்டி கழிக்க பயன்படுத்தப்படும் எலுமிச்சை, பச்சை மிளகாய், கரி சேர்த்து, வாசல் கதவில் கட்டப்படும் திருஷ்டி கயிறுகள், பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்டு உள்ளன. மேலும், தோரணம் உள்ளிட்ட வழிபாடு தொடர்புடைய பொருட்களும், அங்கு பிளாஸ்டிக் மயமாகத் தான் உள்ளன.
காசி மற்றும் அயோத்தியில் தினமும் லட்சக்கணக்கானோர் வந்து போகும் நிலையில், கங்கை துாய்மையாகி வரும் வேளையில், இது போன்ற பிளாஸ்டிக் சமாச்சாரங்களுக்கு ஆரம்பத்திலேயே தடை விதிக்க வேண்டியது அவசியம் என்கின்றனர், தமிழகத்திலிருந்து அங்கு சென்றுள்ள பக்தர்கள்.
- நமது நிருபர் -