கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய முஜிபூர் ரகுமான், டெய்லர் ராஜா ஆகியோர் வேறு இரு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் என, கோர்ட் அறிவித்துள்ளது.

கோவையில், 1998ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், 58 பேர் பலியாகினர். வழக்கில், 168 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளான பாஷா, அன்சாரி உள்ளிட்டோர் சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய போத்தனுாரைச் சேர்ந்த முஜிபூர் ரகுமான், பிலால் எஸ்டேட் டெய்லர் ராஜா ஆகிய இருவரும், 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளனர்.
அவர்களது இருப்பிடம் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, சி.பி.சி.ஐ.டி., போலீசார் அறிவித்திருந்தனர்.
அவர்களது படங்களுடன் மாநிலம் முழுதும், 'போஸ்டர்'களும் ஒட்டப்பட்டன. இந்த வழக்கில், இருவரையும் தேடப்படும் தலைமறைவு குற்றவாளிகள் என, ஏற்கனவே கோர்ட் அறிவித்துள்ளது. இந்த வழக்கு தவிர, வேறு பல வழக்குகளிலும் இவர்களுக்கு தொடர்புள்ளது.
கடந்த, 1996ம் ஆண்டு ஏப்., 22ம் தேதி கோவை மத்திய சிறை டி.ஐ.ஜி., அலுவலகத்தில் இருந்த வார்டன் பூபாலன் மீது பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கிலும் டெய்லர் ராஜா தேடப்பட்டு வருகிறார்.
இந்த வழக்கில் அவரை தேடப்படும் குற்றவாளி என அறிவித்துள்ள ஜே.எம்., 3 கோர்ட், டிச., 23ம் தேதிக்குள் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இதுபோல, முஜிபூர் ரகுமானை, 1997ம் ஆண்டு டிச., 1ம் தேதி 'கிளாசிக் கார்டன் அபார்ட்மென்ட் கார் பார்க்கிங்'கில் குண்டு வைத்த வழக்கில் போலீசார் தேடி வருகின்றனர்.
போலீஸ்காரர் செல்வராஜ் கொலையை தொடர்ந்து நடந்த சம்பவங்களுக்கு பழி வாங்கும் நோக்கில், இந்த குண்டு வைப்பு சம்பவத்தில் முஜிபூர் ரகுமான் ஈடுபட்டுள்ளார்.
அவரை இந்த வழக்கில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, டிச., 23ம் தேதிக்குள் ஜே.எம்., 3 கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.