மதுரை: பிரச்னையின் தீவிரம் கருதி, 'டாஸ்மாக்' மதுபான கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, தமிழக அரசு தரப்பு
தெரிவிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொது
நல மனு:டாஸ்மாக் கடைகள் மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை செயல்படுகின்றன. இதில், 21 வயதிற்கு கீழ் உள்ளவர் களுக்கு சட்டப்படி மது விற்பனை செய்யக்கூடாது என, அறிவுறுத்த வேண்டும்.
மதுவில் கலந்துள்ள பொருட்கள், தயாரிப்பாளர் பரங்கள் மது பாட்டிலில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். புகார் செய்ய வசதி செய்ய வேண்டும்.டாஸ்மாக் கடைகள்,
பார்கள் மதியம், 2:00 மணியிலிருந்து இரவு, 8:00 மணி வரை மட்டும் செயல்பட
உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: மிக குறைந்த நேரம் தான் டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன' என, தெரிவித்தது.
நீதிபதிகள்: மது விற்பனையில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னணியில் உள்ளதே, கடைகள் செயல்படும் நேரத்தை மேலும் குறைத்தால் என்ன?
அரசு தரப்பு: கொரோனா காலத்தில் அண்டை மாநிலங்களிலிருந்து மது வாங்கி வந்து அருந்தியதாக வழக்குகள் பதிவாகின. மது அருந்துவோர் மாற்று வழியை நாடுகின்றனர்.

நீதிபதிகள்: மாணவர்களுக்கு மது விற்பனை முற்றிலும் தடை செய்யப்படவில்லையா?
அரசு தரப்பு: 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க ஆதார் அடையாள எண்ணை சமர்ப்பிப்பது உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள்: பிரச்னையின் தீவிரம் கருதி, டாஸ்மாக் மதுபான கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அரசு தரப்பில் டிச., 1ல் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.