வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
மதுரை: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திற்குள் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்க இருந்த திட்டத்தை மாற்றி, கோவிலுக்கு வெளியே அமைப்பது குறித்து நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மேற்கு ஆடி வீதியில் ஓதுவார் பள்ளி அருகே முதலுதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

ஆகமவிதி மீறல்
இங்கு பக்தர்களுக்கு ரத்த பரிசோதனை, காயம் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கோவிலில் மனித ரத்தம் படக்கூடாது என்பது ஆகமவிதி. அப்படி படும் பட்சத்தில் பரிகாரம் செய்யப்பட வேண்டும். இதுகுறித்து, நிர்வாகம் பட்டர்களிடம் ஆலோசிக்காமல், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க வேண்டும் என்பதற்காக அவசர கதியில் ஆடி வீதியில் முதலுதவி மையத்தை அமைத்தது. ரத்தப் பரிசோதனை செய்யும் போதோ, காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் போதோ தரையில் ரத்தம் படும். அப்படி நடந்தால் ஆகமவிதியை மீறுவதாகும்.

சித்திரை வீதி
இதுகுறித்து, நம் நாளிதழ் செய்தி வெளியிட்டது. கோவிலுக்கு வெளியே சித்திரை வீதியில் உள்ள கோவில் கட்டடங்களில் ஏதாவது ஒன்றில் முதலுதவி மையத்தை அமைக்க வேண்டும் என, சுட்டிக் காட்டப்பட்டது. இதே கருத்தை ஹிந்து அமைப்புகளும் வலியுறுத்தின. தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், கோவிலுக்கு வெளியே முதலுதவி மையம் அமைக்க, கோவில் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
Advertisement