சென்னை: -பக்தர்களின் வசதிக்காகவும், கோவில்களின் பழமை, பாரம்பரியம், கட்டடக்கலை ஆகியவற்றை பாதுகாக்கும் வகையிலும், பெருந்திட்டம் தயாரிக்க, கோவில் நிர்வாகத்திற்கு, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர், தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில், கோவில்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இணை, துணை, உதவி கமிஷனர், செயல் அலுவலருக்கு கமிஷனர் குமரகுருபரன் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:
lகோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கருதி, குடிநீர்,
கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பராமரிக்க, செயல்
திட்டம் வகுக்க வேண்டும்
lபக்தர்களுக்கு, வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும். கோவிலின், கோபுரத்தின் அழகை சிதைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும்
சுவர் மற்றும் தரைகள், பழமை மாறாமல் புனரமைக்கப்பட வேண்டும். போதுமான கைப்பிடி கம்பிகள், பித்தளை கைப்பிடிகளையும் நிறுவலாம். தொல்லியல் வல்லுனர்கள் பரிந்துரைப்படி, கற்கள் மீது பூசப்பட்ட வர்ணங்கள் அகற்றப்பட வேண்டும்
கோவில்களில் இயற்கை பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். கோவில் அலுவலகம் அந்த கோவிலின் தனி கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பை
ஒத்திருக்க வேண்டும்
கோவில் நந்தவனத்தை முறையாக பராமரித்து, பசுமையாக்க வேண்டும்.
கோவிலில் பயனற்ற கழிவுகளை அகற்ற வேண்டும். அறநிலையத்துறை விதிகள்,
அறிவுரைப்படி நன்கொடையாளர் பணிகள் நிகழ்த்த வேண்டும்

திருத்தேர், வாயில் கதவுகள் அந்தந்த கோவில் பாரம்பரியத்திற்கு ஏற்ப நிறுவப்பட வேண்டும். சுவரொட்டிகள், பதாகைகள், அழகு பொருட்கள் ஆகியவை, உடனடியாக அகற்றப்பட வேண்டும்
கோவில்களில் பெருகி வரும் கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளை, முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். இது போன்ற காரணங்களுக்காக, அந்தந்த கோவில் நிர்வாகம் பெருந்திட்டம் தயாரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.