சென்னை: 'அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டு கட்டணம் என்ற பெயரில், இந்தியாவிலேயே மிக அதிகமான கட்டணத்தை வசூலிக்கும்
தமிழக அரசு, அதை மறைக்க, ஆதார் கார்டு என்ற புதிய சர்ச்சையை அவசர அவசரமாக அரங்கேற்றுகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:அரசின் மானியம் பெற மின் இணைப்புடன், 'ஆதார்' எண்ணை இணைக்க வேண்டுமென அவசரகதியாக, அரசு அறிவித்துள்ளது. இரு மாதங்களுக்கு முன், 50 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்தி, மக்களை வஞ்சித்தது திறனற்ற தி.மு.க., அரசு.
ஆதார் இணைப்பிற்கு அவகாசம் தராமல், மக்களை இன்னலுக்கு ஆளாக்கி இருக்கிறது.
மேலும், சத்தம் இல்லாமல், ஒரு புதிய கட்டணத்தை மின் வாரியம் உயர்த்தியுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள், இனி அவர்களின்
கட்டடத்திற்கு உள்ளேயே இருக்கும் மாடிப்படி, வராண்டா, நடைபாதை ஆகிய பகுதிகளுக்கு
விதிக்கப்படும் மின் கட்டணம், 1,500 சதவீதம் உயர்த்தப்பபட்டு உள்ளது.
அதாவது, தொழிற்சாலைக்கான கட்டணம் போல யூனிட்டிற்கு 8 ரூபாய் விதிக்கப்
படுகிறது.
பொது பயன்பாட்டு கட்டணம் என்ற பெயரில், இந்தியாவிலேயே மிக அதிகமாக வசூலிக்கும்
தமிழக அரசு, அதை மறைக்க, ஆதார் கார்டு என்ற புதிய சர்ச்சையை, அவசர அவசரமாக
அரங்கேற்றுகிறது.நஷ்டத்தில் இயங்கும் மின் வாரியத்தை காப்பாற்ற, புதிதாக எதுவும் திட்டங்கள் தீட்டாமல், தற்போது மானியமாக வழங்கும் 100 யூனிட் மின்சாரத்தை நிறுத்த போகின்றனரோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் இணைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்
பட்ட வலைத்தளமும் சில தினங்களாக முடங்கி கிடக்கிறது.

எந்த அவகாசமும் கொடுக்காமல், காரணமும் சொல்லாமல், திடீரென மின் இணைப்பு எண்ணுடன், ஆதாரை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது, தி.மு.க., அரசு.மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க, 2023 மார்ச் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.