சென்னை: பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்த போது, அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாகவும், அது குறித்து விசாரணை நடத்தும்படி கவர்னர் ரவியை சந்தித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை புகார் அளித்துள்ளார்.
இன்று(நவ.,29) காலை கவர்னர் ரவியை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். அப்போது துணை ராணுவப்படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், கோவை கார் குண்டுவெடிப்பு குறித்தும், தமிழக சட்டம் ஒழுங்கு குறித்தும் அண்ணாமலை, இந்த சந்திப்பின் போது, கவர்னரிடம் புகார் தெரிவித்ததாக தெரிகிறது.+
அறிவுரை
பிறகு அண்ணாமலை அளித்த பேட்டி:பிரதமர் மோடி, சென்னை வருகையின் போது, அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு இருந்தது. செஸ் ஒலிம்பியாட் விழாவிற்கு மோடி, சென்னை வந்த போது பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு தவறிவிட்டது. பல மெட்டல் டெட்டக்டர்ஸ் வேலை செய்யவில்லை. அவை, பழுதடைந்து பழுதுபார்க்காமல் பெயரளவிற்கு சில இடங்களில் வைத்திருந்தனர்.
இது தொடர்பாக, மத்திய விசாரணை அமைப்புகள், மாநில அரசுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. பிரதமருக்கு அளிக்கும் பாதுகாப்பில் இவ்வளவு குறைபாடு உள்ளதென்றால், மக்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்குவார்கள்
யார் காரணமோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தனியாக விசாரணை நடத்த வேண்டும் என கவர்னரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். தமிழகத்தில் உளவுத்துறை தூங்கி கொண்டுள்ளது. இது குறித்தும் கவர்னரிடம் மனு அளித்துள்ளோம்.

ஊழல்
ஜல்ஜீவன் திட்டத்தில் ஊழல், குளறுபடி நடந்துள்ளது. நூற்றுக்கணக்கான கோடி அளவு தமிழக அரசு ஊழல் செய்துள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரத்தில் குடிநீர் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. 100 இணைப்புகளில் 30 முதல் 40 இணைப்புகளில் ஊழல் நடந்துள்ளது.
இது குறித்து கவர்னரிடம் மனு அளித்துள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னரிடம் மனு அளித்துள்ளோம்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தும், தமிழக அரசு அதனை அமல்படுத்தாதது ஏன்? அரசாணை பிறப்பிக்காதது ஏன்? கவர்னர் சரியாக செயல்படவில்லை எனக்கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.