இந்தூர்: '' பாத யாத்திரை மேற்கொள்வதால், பொறுமையாக இருக்கும் குணம் வந்துள்ளது'', என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
கடந்த செப்.,7ல் கன்னியாகுமரியில் 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பாதயாத்திரை துவக்கினார். இந்த யாத்திரை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா என 2 ஆயிரம் கி.மீ., தூரம் கடந்து நேற்று முன்தினம்(நவ.,27) ம.பி.,மாநிலம் இந்தூரை வந்தடைந்தது.
இச்சூழ்நிலையில் இந்தூரில், நிருபர்களை சந்தித்த ராகுலிடம், இந்த பாதயாத்திரையால் கிடைத்த திருப்தியான தருணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ராகுல் அளித்த பதில்: பல விஷயங்கள் இருந்தாலும், பொறுமை உள்ளிட்ட சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முன்பு யாராவது என்னை தூண்டிவிட்டாலும், தள்ளிவிட்டாலும் 2 மணி நேரத்திலேயே கோபப்பட்டு விடுவேன். ஆனால், தற்போது 8 மணி நேரம் கடந்தாலும் கோபம் வருவது கிடையாது. அது என்னை பாதிக்கவில்லை. பாதயாத்திரையில் நடக்கும் போது, அதில் ஏற்படும் வலி மற்றும் அதனை அனுபவிக்கும் போது, எதையும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்.
அடுத்ததாக, முன்பை விட மற்றவர்களின் கருத்துகளை கேட்பது அதிகரித்துள்ளது. ஒருவர் வந்து என்னை சந்தித்து அவரது கருத்தை கூறும் போது, அதை கூர்ந்து கவனிக்கிறேன். இவை அனைத்தும் எனக்கு அதிகளவு பலன்களை தருகிறது.
பாதயாத்திரையை துவக்கிய போது, காலில் முன்பு ஏற்பட்டிருந்த காயம் காரணமாக வலி ஏற்பட்டது. இதனால், நிறைய அசவுகரியமும் உருவானது. இதுபோன்ற சூழ்நிலையில் பாத யாத்திரையில் தொடர்ந்து நடக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தொடர்ந்து நடக்க துவங்கிய போது, அந்த பயத்தை எதிர்கொண்டதுடன், நடக்க முடியுமா என்ற கேள்வியை இல்லாமல் போக செய்தேன்.

தென் மாநிலம் ஒன்றில், வலியால் அவதிப்பட்ட நேரத்தில் 6 வயதான சிறுமி ஒருவர் வந்து என்னிடம் கடிதம் ஒன்றை கொடுத்தார். அவர் சென்ற பிறகு அந்த கடிதத்தை படித்த போது, அதில் '' நீங்கள் தனியாக நடப்பதாக நினைக்க வேண்டாம். நானும் உங்களுடன் நடக்கிறேன். ஆனால், நடந்து செல்ல எனது பெற்றோர் அனுமதிக்கவில்லை. ஆனால் உங்களுடன் இணைந்து நடக்கிறேன்'' எனக்கூறியிருந்தார். இது போல் ஆயிரக்கணக்கான உதாரணங்களை என்னால் பகிர முடியும். ஆனால், இந்த நிகழ்வு தான் முதலில் என் மனதில் தோன்றியது. இவ்வாறு ராகுல் கூறினார்.