ஐதராபாத்: தெலுங்கானா முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்தச்சென்ற ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி தலைவர் ஷர்மிளா (இவர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி) காரில் இருக்கும்போதே கிரேன் மூலம் தெலுங்கானா போலீசார் காரை இழுத்து சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இளைய சகோதரி ஷர்மிளா ரெட்டி, 47. இவர் ‛ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா' என்னும் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு துவக்கினார். தெலுங்கானாவில் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியை தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.
இந்த நிலையில் முதல்வர் சந்திரசேகர ராவ் அரசுக்கு எதிராக ‛பிரஜா பிரஸ்தானம் பாதயாத்ரா' என்ற பெயரில் தெலுங்கானாவில் யாத்திரை நடத்தி வருகிறார். நேற்று (நவ.,28) வாராங்கல் பகுதியில் ஷர்மிளா உரையாற்றியபோது, டி.ஆர்.எஸ் கட்சி எம்எல்ஏ சுதர்ஷன் ரெட்டியை கடுமையாக தாக்கி பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த டிஆர்எஸ் கட்சியினர் ஷர்மிளாவின் காரை தாக்கி சேதப்படுத்தினர். இந்த நிலையில் இன்று முதல்வரின் இல்லத்தை நோக்கி ஷர்மிளா தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்றார்.
அப்போது ஷர்மிளா தனது காரில் புறப்பட்டு சென்றபோது, கிரேன் மூலம் ஷர்மிளாவின் காரை இழுத்து சென்றனர். கிரேன் காரை இழுத்துச் செல்லும்போது ஷர்மிளா அந்த காரில் அமர்ந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.