சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை ஆப்ஷன் வர்த்தகரான பி.ஆர்.சுந்தரின் மேன்சன் கன்சல்டன்சி நிறுவனம் செபியின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பதிவுபெறாமல் முதலீட்டு ஆலோசனை வழங்கியது தொடர்பாக செபி விசாரிக்க உள்ளது.
கணித ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய பி.ஆர்.சுந்தர், பங்குச்சந்தை குறித்த அறிமுகம் கிடைத்து, அதில் ஆப்ஷன் வர்த்தக நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்து அதன் மூலம் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சமூக வலைதளங்கள் வந்த பின்னர் இவர் பிரபலமடையத் தொடங்கினார். தனது ஆண்டு வருவாய் குறித்து இவர் வெளிப்படையாக அதில் பதிவிடுவார். ஆப்ஷன் வர்த்தகத்திற்கான வகுப்புகளை இவர் நடத்துவதால், இவ்வாறு அனைத்து வருவாயையும் பகிரங்கமாக வெளியிடுவதாக கூறுபவர்கள் உண்டு. யுடியூப், டுவிட்டர் மூலம் சந்தையின் தினசரி போக்கு குறித்த அறிக்கைகளையும் வெளியிடுகிறார்.
இந்நிலையில் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இவரது நிறுவனத்தை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக செபி இணையதளத்தின் நவ., 28 வழக்குகள் பட்டியலில் பி.ஆர்.சுந்தரின் மேன்சன் நிறுவனம் செபி சட்டம் 11பி பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. பதிவு செய்யாமல் முதலீட்டு ஆலோசனை வழங்கியது தொடர்பாக விசாரிக்கிறது.
![]()
|
செபி நடவடிக்கை குறித்து பி.ஆர்.சுந்தர் மணிகன்ட்ரோல் இணையதளத்திடம் கூறியுள்ளதாவது: செபியில் பதிவு பெற்ற ஆலோசனை நிறுவனமான செபு வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு முன், தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக ரிசர்ச் அனலிசிஸ் வழங்கும் படி கேட்டுக்கொண்டது. நான் என்.ஐ.எஸ்.எம்.,ல் ரிசர்ச் அனலிஸ்ட் ஆக பதிவு பெற்றவன். என்னுடைய சேவையை செபு நிறுவனத்திற்கு வழங்கியதற்காக கட்டணம் கேட்டேன். அவர்கள் ஜி.எஸ்.டி., இன்புட் கிரெடிட், டி.டி.எஸ்., போன்ற கூடுதல் செயல்பாட்டு செலவுகளை தவிர்க்க, ஆலோசனைக் கட்டணமாக பெற்றுக்கொள்ளும் படி கேட்டனர். இது செபியின் படி நடைமுறை மீறல் ஆகும், அதற்காக அவர்கள் விளக்கம் கோருகின்றனர். நாங்கள் எல்லாவற்றையும் அப்போதே நிறுத்துவிட்டோம். இவ்வாறு கூறியுள்ளார்.