சென்னை: உயர்கல்வியில் தமிழகம் தான் முன்னோடி; அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா இன்னும் பல சாதனைகளை படைக்க உள்ளது என சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி பேசினார்.

சென்னையில் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கவர்னர் ரவி கலந்து கொண்டு பேசியவதாவது:
இந்தியாவின் உருவாக்கத்திற்கு அடித்தளம் இட்ட பெருமை தமிழகத்தை பெரிதும் சாரும். புத்தக அறிவு மட்டும் மாணவர்களுக்கு போதாது. திறன் கொண்ட கல்வியே மாணவர்களை முழுமையாக்கும், அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.
கற்பிக்கும் முறை தற்போது மாறி வருகிறது. மாணவர்கள் என்பவர்கள் ஆலமர விதைகள் போன்றவர்கள். அதை கண்டறிந்து பெரிய மரமாக வளர ஆசிரியர்கள் உதவிட வேண்டும். மாணவர்கள் முன்னேற, ஆசிரியர்கள் பெரிதும் உதவ வேண்டும் என்பதே ஆசிரியர்கள் கடமையாகும்.
நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு இன்றியமையாததது. தமிழகத்தில் கல்வி வளர்ச்சியை நாடு நீண்டகாலமாக அறிந்துள்ளது. தாய்மொழியில்தான் அறிவை வளர்க்க முடியும். திருக்குறள் அனைத்து மாநில பாடத்திட்டத்திலும் இடம் பெற வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் தமிழ்மொழியை 2வது மொழியாக கொண்டு வர அம்மாநில முதல்வர்களிடம் பேசியுள்ளேன்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழில் இருந்து மொழி மாற்றம் செ ய்யப்பட்டு 13 இந்திய மொழியில் திருக்குறளை வெளியிட்டார்.
இது தமிழுக்கு பிரதமர் செய்த உதவி. உயர்கல்வியில் தமிழகம் தான் முன்னோடி; அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா இன்னும் பல சாதனைகளை படைக்க உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.