சென்னை: தமிழகம் முழுவதும் 1983 முதல் 2021 வரை நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அண்ணாதுரை என்பவர் ஓய்வூதிய பலன்கள் வேண்டுமென வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழகம் முழுவதும் 1983ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பல்வேறு நீதிமன்றங்களில் 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையை மேற்கோள்காட்டினார்.

‛தமிழகத்தில் 1983ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை மொத்தமாக 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவற்றை விசாரணை நீதிமன்றங்கள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்' என உத்தரவிட்ட நீதிபதி, ‛தேவையில்லாமல் ஊழல் வழக்குகளைத் தள்ளி வைக்கக்கூடாது.
ஊழல் வழக்குகளை நீண்ட காலம் தள்ளி வைத்திருப்பது அவற்றை நீர்த்துப் போகச் செய்துவிடும். அதோடு மட்டுமல்லாமல் ஊழலைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிடும். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தப்பி விடுவார்கள்' எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கை பொறுத்தவரை, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர், ஓய்வுகால பலன்களை பெற்று விட்டதால், மனுதாரருக்கும் சில பலன்களை வழங்கி விட்டு, குற்ற வழக்கு முடிவுக்கு வந்த பின் மீத பலன்களை வழங்க வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.