மும்பை: தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவி குடிசைப் பகுதியை மறுசீரமைக்கும் திட்டத்திற்கான ஏலத்தை அதானி நிறுவனம் பெற்றுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக, மும்பையில் உள்ள தாராவி பகுதி கருதப்படுகிறது. 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த பகுதியானது ஏராளமான சிறு தொழில், மருந்துகள், தோல், காலணி, துணி உள்ளிட்ட தொழில்களுக்கான மையமாக தாராவி உள்ளது.
மும்பை மத்திய பகுதியிலும் , பந்த்ரா, குர்லா காம்ப்ளெக்ஸ் மற்றும் தெற்கு மும்பை அருகில் உள்ள இந்த பகுதியில் சுமார் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர்.இவர்களில் அதிகம் பேர் தமிழர்கள். 2008 ம் ஆண்டில் பல ஆஸ்கர் விருதுகளை பெற்ற 'ஸ்லம்டாக் மில்லியனர்' படம் வெளியான பிறகு இந்த பகுதி பலரின் கவனத்தை பெற துவங்கியது.

கடந்த 15 ஆண்டுகளாக இந்த பகுதியை மறுசீரமைக்க மஹாராஷ்டிரா அரசு முயற்சி செய்து, அதற்காக 4 முறை ஏலம் விடப்பட்டது. ஆனால், அது தோல்வியில் தான் முடிந்தது. கடைசியாக கடந்த 2019 ம் ஆண்டு தோல்வியில் முடிந்த நிலையில், தற்போதைய அரசு அதற்கான முயற்சியில் மீண்டும் இறங்கியுள்ளது.
சுமார் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்கு, ஆரம்ப கட்ட முதலீடாக அதிகளவு பணத்தை முதலீடு செய்யும் நிறுவனத்தை தேர்வு செய்ய அரசு திட்டமிட்டது. ஒட்டு மொத்த திட்டத்தை 17 ஆண்டுகளில் நிறைவு செய்ய முடிவு செய்துள்ள மஹா., மாநில அரசு மறுசீரமைப்பு திட்டத்தை மட்டும் 7 ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயித்தது.

தாராவி பகுதியை மறுசீரமைக்க கடந்த அக்.,1 ம் தேதி ஏலம் விட்டது. 11ல் நிறைவு பெற்றது. அதில், இந்தியா, தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்சை சேர்ந்த 8 நிறுவனங்கள் தாராவி மறுவளர்ச்சி திட்டத்திற்கு ஆர்வம் காட்டினாலும் , 3 நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பம் செய்தன.
அதானி நிறுவனம், டிஎல்எப் மற்றும் நமன் குரூப் நிறுவனங்கள் ஆகியவை ஏலத்தில் பங்கெடுத்தன. ஒப்பந்த புள்ளிகள் இன்று(நவ.,29) திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், தொழில்நுட்ப ரீதியாக நமன் குரூப் தகுதி பெறவில்லை.
ஒப்பந்தத்தை கைப்பற்ற அதானி நிறுவனம் ரூ.5,069 கோடி குறிப்பிட்டதால், ஏலத்தை அந்த நிறுவனம் கைப்பற்றியது. டிஎல்எப் நிறுவனம் ரூ.2,025 கோடி குறிப்பிட்டிருந்தது.
இதற்கு அடுத்த கட்டமாக அரசின் ஒப்புதலை பெற்று பணிகளை துவங்க இருப்பதாக, இந்த திட்டத்திற்கான தலைமை நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார்.