காங்., - எம்.பி., ராகுல்: உ.பி., மாநிலம், அமேதி லோக்சபா தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேனா என்பது குறித்து எதுவும் தெரியாது. இப்போதைக்கு என் கவனம் ஒற்றுமை யாத்திரையில் உள்ளது. அமேதியில் போட்டியிடு வேனா, மாட்டேனா என்ற கேள்விக்கு, ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் பதில் கிடைக்கும்.
டவுட் தனபாலு: உங்க குடும்பத்தின் பரம்பரை சொத்து மாதிரியான அந்த தொகுதியை, 2019 தேர்தல்ல எதிர்க்கட்சியான பா.ஜ.,விடம் பறிகொடுத்துட்டீங்க... நல்லவேளையா, கேரளாவின் வயநாடு கைகொடுத்து, எம்.பி.,யானீங்க... அமேதியில பட்ட அடியின் வடு, இன்னும் உங்க மனசுல இருப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன்: கவர்னரை அவதுாறாக பேசி, அவர் பணி செய்யாமல் தடுப்பதை, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் கடும் குற்றமாக சொல்கிறது. எனவே, அந்த சட்டத்தின் கீழ் தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையென்றால், வழக்கு தொடுக்கப்படும்.
டவுட் தனபாலு: ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் கவர்னரை மட்டம் தட்டி பேசினால், சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால் தானே, ஆர்.எஸ்.பாரதி மாதிரி எந்த அரசு பதவியிலும் இல்லாதவங்களை தலைமை துாண்டி விட்டுள்ளது... அதனால், அவர் மீது நடவடிக்கை எடுப்பாங்களா என்பது, 'டவுட்'தான்!
திருப்பூர் மாவட்ட ம.தி.மு.க., தொழிற்சங்கத்தின், விசைத்தறி மற்றும் பொது தொழிலாளர் சங்க செயலர் குமார்: வாரிசு அரசியல் வேண்டாமென எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க., தோற்றுவிக்கப்பட்டது. தற்போது, ம.தி.மு.க.,விலும் வாரிசு அரசியல் வந்துவிட்டது. கட்சியின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்ததால், 20 ஆண்டுகளாக இருந்த கட்சியில் இருந்து விலகி விட்டோம்.
டவுட் தனபாலு: அடடா... தி.மு.க.,வில் உதயநிதியும், பா.ம.க.,வில் அன்புமணியும் வாரிசாக களம் இறக்கியதால், அவங்களை நோக்கி இளைஞர் பட்டாளம் படையெடுக்கிறதா அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் சொல்றாங்க... ம.தி.மு.க.,வுல எல்லாம் 'உல்டா'வா நடக்குதே... புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கலாமா என்ற, 'டவுட்'தான் வருது!