என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமி, சமீபத்தில் தமிழக கவர்னர் ரவியை சந்தித்து புகார் மனு அளித்தார். அதன்பின் நிருபர்களை சந்தித்த அவர், 'மாநிலம் முழுதும் உள்ள அரசு மருத்துவ மனைகளில், உயிர்காக்கும் மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன. அதேநேரத்தில், முந்தைய அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், மருந்துகள் தடையின்றி வினியோகம் செய்யப்பட்டன' என்று தெரிவித்தார்.
பழனிசாமியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராக, ஆளும் தி.மு.க.,வினர் தான் பொங்கி எழ வேண்டும். ஆனால், தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை ஆவேசப்பட்டுள்ளார். அதாவது, 'தற்போதைய தி.மு.க., அரசை குற்றம் சாட்டுவதை, எந்த வகையிலும் ஏற்க முடியாது. மருத்துவத்தையும், கல்வியையும், ஸ்டாலின் அரசு இரு கண்களாக கருதுகிறது' என்று கூறி, தி.மு.க., அமைச்சர் போல வக்காலத்து வாங்கியுள்ளார்.
தி.மு.க., - காங்., இடையே கூட்டணி நீடிப்பதால், அந்த கூட்டணியின் நட்புக்கு பக்கபலமாக இருப்பது சரி தான். அதற்காக, ஆளும் கட்சியின் துணை அமைப்பு போல காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் செயல்படுவது எந்த வகையில் நியாயம்? காமராஜர் காலத்திற்குப் பின், காங்கிரஸ் கட்சியினரால், தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை.
இந்த லட்சணத்தில், தி.மு.க.,வின் நிர்வாக திறமையின்மைக்கும், மோசடிகளுக்கும், ஊழல்களுக்கும், காங்கிரஸ் கட்சியினர் துணை போனால், தற்போது கிடைத்து வரும் குறிப்பிட்ட சதவீத ஓட்டு களும், அடுத்த தேர்தலில், காங்.,கிற்கு கிடைக்காமல் போய் விடும். மக்களின் பிரச்னைகளை அரசுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு நல்லது செய்ய துப்பில்லை என்றாலும், செல்வப் பெருந்தகை போன்றவர்கள், ஆளும் கட்சியின் எடுபிடிகள் போல, அரசுக்கு ஆதரவாக பேசி அலப்பறை செய்யாமல் இருந்தால் நல்லது.
செல்வப் பெருந்தகை போன்றவர்கள், மக்களுக்கு உபகாரம் செய்யா விட்டாலும், மற்றவர்கள் அதைச் செய்ய முன்வந்தால், அதை தடுக்காமல் இருந்தாலே நல்லது. காங்கிரஸ் கட்சி ஏன் தேய்ந்து வருகிறது என்பது, இவர்களை போன்றவர்களின் பேச்சை கேட்கும் போது தான் தெரிகிறது.
அம்பேத்கர் கனவு பகல் கனவாகி விட்டது!
என்.
வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆண்டு
வருமானம், ௮ லட்சம் ரூபாய் வரை உள்ள முற்பட்ட வகுப்பினர் பொருளாதாரத்தில்
நலிந்த பிரிவினர் என்கிறது, மத்திய அரசு. ஆனால், வருமான வரித்துறையோ,
ஆண்டுக்கு, 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்கள், வருமான வரி
கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்கிறது.
இதனால், 'ஆண்டுக்கு, 8
லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள், பொருளாதார அடிப்படையில் ஏழைகள்
என்றால், அவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை ரத்து செய்ய
வேண்டும்' எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் வழக்கு
தொடர்ந்துள்ளார்.
'இது, அரசின் கொள்கை முடிவு' என்று கூறி மனுவை
தள்ளுபடி செய்யாமல், விசாரணைக்கு ஏற்றுள்ளது நீதிமன்றம். மனு தொடர்பாக,
மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பிரச்னை
சிக்கலானது தான்; மத்திய அரசின் செயலர்கள் என்ன பதில் சொல்லப் போகின்றனரோ?
இந்த
நாட்டில் உண்மையான ஏழைகள் யார் என்பதை அடையாளம் காண்பதில், மத்திய அரசும்,
மாநில அரசுகளும் பின்பற்றும் அளவுகோல்கள் வித்தியாசமாக இருப்பதால் தான்,
நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்குகள் தாக்கலாகின்றன.
தாழ்த்தப்பட்டவர்கள்
முன்னேற இட ஒதுக்கீட்டை அமல் செய்த, முன்னாள் மத்திய சட்ட அமைச்சர்
அம்பேத்கர், 'இட ஒதுக்கீடு, ௧௦ ஆண்டு களுக்கு மட்டுமே செல்லும்' என்று
சொன்னார்.
ஆனால், நம் அரசியல் வியாபாரிகள், ஆட்சியை தக்க வைத்துக்
கொள்ள, இட ஒதுக்கீடு கொள்கையை, 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீட்டித்து
குளிர்காய்கின்றனர்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்
பிரிவில் ஏழைகளாக இருப்பவர்கள், சேரிகளில் வாழ்ந்து எந்த முன்னேற்றம்
அடையாமல், இன்னும் ஏழைகளாகவே இருக்கின்றனர்.
இடஒதுக்கீடு அளித்தால்
இவர்கள் முன்னேற்றம் அடைவர் என்று, அம்பேத்கர் கண்ட கனவு, வெறும் பகல்
கனவாகவே முடிந்து விட்டது. அரசு கொண்டு வரும் எந்தத் திட்டமும், உண்மையான
பயனாளிகளைச் சென்று அடையாததால் வந்த கோளாறு இது.
அதனால்,
பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு
உட்பட, பல்வேறு பிரிவினருக்கும் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு, குறிப்பிட்ட
ஆண்டுகள் மட்டுமே தொடர வேண்டும் என்ற முடிவை, இனியாவது மத்திய, மாநில
அரசுகள் எடுக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு விஷயத்தில் சில
ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுத்தால் மட்டுமே, அடுத்தடுத்து சிக்கல்கள்
உருவாவதும், முன்னேறிய பிரிவினரே மேலும் மேலும் முன்னேற்றம் அடைவதும்
தவிர்க்கப்படும். மத்திய, மாநில அரசுகள் கவனித்தால் நல்லது.
கமலுக்கு பாடம் புகட்ட வேண்டும்!
கி.பொன்மலை
பாபு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., உடன்
கூட்டணி அமைத்து, வரும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள
தயாராகி விட்டார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல். இதன்
வாயிலாக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைக்கிறார்.
அதாவது,
தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதன் வாயிலாக, தன் கட்சி வேட்பாளர்கள் வெற்றி
பெற முடியும்; அத்துடன், தான் நடிக்கும் படங்கள் தியேட்டர்களில்
வெளியாவதில், எந்தப் பிரச்னையும் இருக்காது என்றும் கணக்கு போடுகிறார்.
மேலும்,
கடவுள் நம்பிக்கை இல்லாத கமல், தி.மு.க., உடன் கூட்டணி அமைத்தால், ஹிந்து
மக்களுக்கு கிஞ்சிற்றும் நன்மை செய்ய மாட்டார் என்பது நிச்சயம்.
அதேநேரத்தில்,
இவர் கூட்டணி அமைக்கவுள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தேவர் ஜெயந்தி
விழாவில் மட்டுமின்றி, பல கோவில்களிலும் வழங்கப்பட்ட விபூதி பிரசாதத்தை,
நெற்றியில் பூசாமல் கீழே கொட்டியவர்.
அத்துடன், மனுதர்மம் பற்றி
கண்டபடி பிதற்றும் திருமாவளவன், 'பிராமணர்களின் பூணுாலை அறுக்க வேண்டும்'
என்று அறை கூவல் விடுத்து வரும், சுப.வீரபாண்டியன் போன்றோரும், அந்த
அணியில் உள்ளனர்.
அதனால், அவர்களோடு சேரும் கமலும் நிச்சயம், ஹிந்துக்களுக்கு எந்த நன்மையும் செய்யப் போவதில்லை.
எனவே,
ஏற்கனவே நடைபெற்ற தேர்தல்களில், கமலுக்கு தோல்வியை பரிசாக வழங்கியது போல,
அடுத்து வரும் தேர்தல்களிலும், அவருக்கு தோல்வியையே பரிசாக வழங்க வேண்டும்;
இதன் வாயிலாக, அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
Advertisement