கோல்கட்டா :மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த புது மாப்பிள்ளை, திருமணத்தன்று மணமேடையிலும் கடமை உணர்வுடன் 'லேப்டாப்' பில் வேலை பார்ப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
கொரோனாவின் தீவிர பரவலுக்குப் பின், 'ஒர்க் ப்ரம் ஹோம்' எனப்படும், வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் நடைமுறை அதிகரித்தது. கொரோனா தாக்கம் குறையத் துவங்கியதை அடுத்து, படிப்படியாக பெரும்பாலான நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு வந்து பணியாற்றும்படி கூறியுள்ளன.
இரண்டு ஆண்டுகளாக வீட்டிலிருந்தபடி சொகுசாக வேலை பார்த்து விட்டு, மீண்டும் அலுவலகத்துக்கு செல்வதை சில ஊழியர்கள் விரும்பவில்லை. சில அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் கண்டிப்பாக வரும்படி கூறியதால், அவர்கள் மீது புழுதி வாரி துாற்றி விட்டு, ஊழியர்கள் வேலையையே ராஜினாமா செய்து ஓட்டம் பிடித்த சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர், சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த புகைப்படத்தில், கோல்கட்டாவில் மணமகன் ஒருவர் திருமணத்துக்கு தயார் நிலையில் மணமேடையில் அமர்ந்துள்ளார்.
அருகில் இரண்டு புரோகிதர்கள் அமர்ந்து மந்திரங்களை சொல்கின்றனர். அப்போது கூட அந்த மணமகன், லேப்டாப்பில் கடமை உணர்வுடன் பணியாற்றுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த புகைப்படத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 'அவர் உண்மையிலேயே வேலை செய்கிறாரா அல்லது வேறு ஏதாவது பார்க்கிறாரா என தெரியவில்லை' என, ஒரு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.மற்றொரு தரப்பினர், 'திருமணத்தன்றும் வேலை பார்க்கும்படி எந்த நிறுவனமும் கட்டாயப்படுத்துவது இல்லை. இது, விளம்பரத்துக்காக வெளியிடப்பட்ட புகைப்படம் போல் தோன்றுகிறது' என, தெரிவித்துள்ளனர்.
'மணமேடையில் கடமை உணர்ச்சியுடன் பணியாற்றும் இந்த மணமகனை கரம்பிடித்த மணமகளின் நிலை தான் பரிதாபம்' என, சிலர் கிண்டலாக தெரிவித்துள்ளனர்.