'பாம் போட்டு கொல்வோம்' என, ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலர் மணிமாறன், 49, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, 'போக்சோ' வழக்கில் சிக்கியதும், அவர் மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி, 34. சி.ஆர்.பி.எப்., எனப்படும் துணை ராணுவ படை வீரர். கடந்த 13 ஆண்டுகளாக பணிபுரியும் இவர், தற்போது மேகாலயா மாநிலத்தில் பணியில்உள்ளார்.
கருத்து பதிவு
நாட்டை பிளவுபடுத்தும் விதமாக பேசியதாக, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை விமர்சித்து, முகநுாலில் இவர் கருத்து பதிவிட்டார்.
இதையடுத்து, வி.சி., லத்துார் ஒன்றிய செயலர் மணிமாறன் உள்ளிட்டோர் அவருக்கு, 'பாம் போட்டு கொல்வோம்' என, மொபைல் போன் வழியாக, கொலை மிரட்டல் விடுத்தனர்.
தன்னை மிரட்டியதையும், அவர் முகநுாலில் பதிவிட்டதால், சமூக வலைதளங்களில் வைரலானது.
குருமூர்த்தியை தொடர்பு கொண்ட, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்' என, தெரிவித்தார்.
ராணுவ படை வீரரையே மிரட்டிய வி.சி., நிர்வாகி மணிமாறன், கூவத்துார் அடுத்த கடலுார், உத்திராடம் என்பவரின் மகன். வி.சி., ஒன்றிய செயலர்.
இவருக்கு, கடலுார், கல்பாக்கம் - புதுப்பட்டினம் பகுதிகளில் வீடுகள் உள்ளன. புதுப்பட்டினம் தனியார் பள்ளியில், தமிழ் ஆசிரியராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார். பள்ளி மாணவியரை, பாலியல் ரீதியாக சீண்டியதாக, இவர் மீது தொடர்ந்து புகார் எழுந்தது.
இவர், 13 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், 'பிறரிடம் கூறினால் கொன்று விடுவேன்' என, மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள், கடந்த ஆகஸ்ட்டில், கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் நடத்தினர்.
பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் மணிமாறனை கைது செய்தனர்.
வாயலுார் - கடலுார் பாலாற்று தடுப்பணை கட்டுமான ஒப்பந்த நிறுவனத்திடம், பணம் கேட்டு மிரட்டியது; அரசு பஸ் டிரைவரை தாக்கியது உள்ளிட்ட பல வழக்குகள், இவர் மீது உள்ளன.
கடந்த, 2010ம் ஆண்டு முதல், இவர் மீது குற்றப் பதிவேடும் உள்ளது. கல்பாக்கம் போலீசாரை மிரட்டியதாக, அவர் மீது வழக்கு உள்ளது.
சிறை
கடந்த நவ., 25ல், பவுஞ்சூர் அடுத்த கண்டிகை பகுதியில், குவாரி மண் ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி, அவர் தன் ஆதரவாளர்களுடன், பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்டதால், அப்பகுதியை சேர்ந்த தர்மன் மகன் கார்த்திகேயன் மற்றும் குடும்பத்தினர் தாக்கப்பட்டனர்.
இதுகுறித்து, அணைக்கட்டு போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது வரை, போக்சோ உள்ளிட்ட, 10 வழக்குகள் மணிமாறன் சிக்கி உள்ளார்.
இவர் தான் ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
- நமது நிருபர் -