காஞ்சிபுரம்:'அறிவாலயம் என் கோவில்' என, ஆர்.எஸ்.பாரதி கூறியதால், அந்த கோவில் முன் பிச்சை எடுப்பதற்காக, அவர் வீட்டு முகவரிக்கு, காஞ்சிபுரம் பா.ஜ.,வினர், தபாலில் தட்டுக்கள் அனுப்பி வைத்து, எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருநெல்வேலியில் நடந்த பொதுக் கூட்டத்தில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசியபோது, 'ஐ.பி.எஸ்., படித்த கவர்னர் ரவி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் மென்டல்'என்றார்.
இதற்கு அண்ணாமலை, 'கோபாலபுரம், அறிவாலயத்தில் பிச்சை எடுப்பவர்கள் அப்படித்தான் பேசுவர்' என பதிலடி தந்துள்ளார்.
இதற்கு ஆர்.எஸ்.பாரதி, 'அறிவாலயம்தான் என் கோவில்' என,பதில் கருத்து தெரிவித்து உள்ளார்.
இதற்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.,வினர், அறிவாலயம் கோவில் என்றால், வெளியில் அமர்ந்து பிச்சை எடுப்பதற்காக, அலுமினிய தட்டு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில், நகர ஊடக பிரிவு செயலர் காமேஷ், மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், செயலர் வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை, நங்கநல்லுாரில் உள்ள ஆர்.எஸ்.பாரதியின் வீட்டு முகவரிக்கு, பதிவு தபாலில் தனித் தனியாக ஐந்து தட்டுகளை அனுப்பி உள்ளனர்.