சென்னை:சட்ட விரோதமாக, 'சேட்டிலைட் போன்' பயன்படுத்தி, வெளிநாடுகளில் வசிப்போரிடம் பேசி, சதிச் செயலுக்கு திட்டமிட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தாம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணலிங்கம், 43. இவருக்கு, வேந்தன், ரமேஷ், சரவணன் என்ற பெயர்களும் உள்ளன. 1998ல், இலங்கையில் இருந்து அகதியாக, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமுக்கு வந்தார்.
சில ஆண்டுகள் கழித்து, அங்கிருந்து தப்பினார். இவர் சட்ட விரோதமாக, சேட்டிலைட் போன் பயன்படுத்தி, வெளிநாடுகளில் வசிப்போரிடம் பேசி வந்தார். அதன் வாயிலாக சதிச் செயலில் ஈடுபட திட்டமிட்டு வந்தார்.
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களிடம் பல லட்சம் ரூபாய் வசூல் செய்து, கள்ளத்தனமாக படகில், ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கிறார். இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு, படகில் டீசல் உள்ளிட்ட பொருட்களை கடத்துகிறார் என, 'க்யூ பிரிவு' போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இது பற்றி வழக்குப்பதிவு செய்து, சென்னை, தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் தங்கியிருந்த கிருஷ்ணலிங்கத்தை, 2010ல் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு, தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு வழக்கறிஞர் காயத்ரி ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சஹானா, நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.
தொலைதொடர்பு சட்டத்தில், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தில் நான்கு பிரிவுகளில் மொத்தம் ஒன்பது ஆண்டுகள் வரையும் தண்டனை விதித்து, இதை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
மேலும், 4,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துஉள்ளார்.