சென்னை:கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு, டிச., 5, 6ம் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கார்த்திகை தீபத் திருவிழா டிச., 6ல் நடக்க உள்ளது. இதற்காக, சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், 27ம் தேதி கொடி ஏற்றப்பட்டு, திருவிழா துவங்கியது. வரும் 6ம் தேதி அங்கு, மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை வரும் பக்தர்களின் வசதிக்காக, டிச., 5ம் தேதியும், 6ம் தேதியும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், புதுச்சேரி, பெங்களூரு, நாகர்கோவில், திருநெல்வேலி, துாத்துக்குடி, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இருக்கை, படுக்கை, 'ஏசி' வசதியுடைய சொகுசு பஸ்களுக்கான டிக்கெட்டுகளை, www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc எனும் 'மொபைல் ஆப்' வாயிலாக முன்பதிவு செய்யலாம்.
சிறப்பு பஸ்களின் இயக்கம் காரணமாக, திருவண்ணாமலையில் 12 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு பஸ்களுக்கான தகவல்களுக்கு, மதுரை அலுவலகத்தை, 94450 14426; நெல்லை அலுவலகத்தை 94450 14428; நாகர்கோவில் அலுவலகத்தை 94450 14432 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தீபத் திருவிழாவில் பங்கேற்க, கவர்னர் ரவி வரும், 6ம் தேதி திருவண்ணாமலை செல்கிறார். கார்த்திகை தீபமான, டிச., 6 அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீப தரிசனம்; மாலை, 6:00 மணிக்கு மகா தீப தரிசனம் நடக்க உள்ளது. இதில், தமிழக கவர்னர் ரவி பங்கேற்க உள்ளார். அதையொட்டி, வரும் 5, 6ம் தேதி, கவர்னர் திருவண்ணாமலை செல்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.